விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்: முதல்வருடனான சந்திப்புக்குப் பின் அய்யாக்கண்ணு தகவல்
முதல்வர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) போராட்டத்தைத் தொடங்கினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அது தொடர் போராட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அய்யாக்கண்ணுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அய்யாக்கண்ணு சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரும்பு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் வாக்குறுதியளித்துள்ளார். முதல்வர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறோம். ஒருவேளை எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
ஒரே நாளில் எட்டப்பட்ட சமரசம்?!
டெல்லியில் சுதந்திரமாக 41 நாட்கள் போராட முடிந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கிய 2-வது நாளே பல்வேறு கெடுபிடிகளுக்கு உள்ளாகினர். முதலாவதாக விவசாயிகள் போராட்டத்துக்கே போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இரண்டாவதாக இன்று காலை முதலே வாலாஜா சாலை பகுதியை போலீஸ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. மூன்றாவதாக டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராடியபோது தமிழக முதல்வர் தொடங்கி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், சென்னையில் மட்டும் யாரும் விவசாயிகளை வந்து பார்க்கவில்லை.
இத்தகைய சூழலில்தான், முதல்வர் அளித்த வாக்குறுதியின் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.