காதல் திருமணம் செய்த இளம்பெண்: ஸ்ரீவைகுண்டம் அருகே ஆணவக் கொலை – 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றில் உடல் மீட்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண், 2 ஆண்டுகளுக்கு முன் மாயமான நிலையில், கிணற்றிலிருந்து அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது. வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் மணலூரில் 2 ஆண்டுகளுக்கு முன் எரிந்த நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. தலை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தது. அவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏரல் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

திடீர் திருப்பம்

இவ்வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகிய இருவரை பிடித்து, ஏரல் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் விசாரணை நடத்தினார். ஆனால், அவர்களுக்கும், சிறுதொண்டநல்லூர் பெண் கொலைக்கும் தொடர்பில்லை என்பது தெரிய வந்தது.

இதில் முக்கிய திருப்பமாக, கால்வாய் கிராமத்தில் தங்களது உறவுக்கார பெண்ணை கொலை செய்து, உடலை அங்குள்ள கிணற்றில் வீசியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

காதல் திருமணம்

கொல்லப்பட்ட இளம்பெண் கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகள் வெண்ணிலா (17) என்பது தெரிய வந்தது. சுடலைமுத்து திருப்பூர் மாவட்டம், கிணத்துக்கடவில் குடும்பத்துடன் தங்கியிருந்து தும்பு ஆலையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அங்கு வேலை பார்த்த இளைஞரை வெண்ணிலா காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்.

கிணற்றில் மீட்பு

அந்த இளைஞர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், சுடலைமுத்து குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி கால்வாய் கிராமத்துக்கு வெண்ணிலாவை அவர்கள் அழைத்து வந்துள்ளனர். சில நாட்கள் கழித்து அவரை காணவில்லை என செய்துங்கநல்லூர் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வந்த நிலையில் தான், அவர் கொலை செய்யப்பட்டது, 2 ஆண்டுகளுக்குப் பின் தெரிய வந்தது.

வெண்ணிலா உடல் வீசப்பட்ட, கால்வாய் கிராமத்துக்கு அருகேயுள்ள கிணற்றை, ஆறுமுகமும், பாலசுப்பிரமணியனும் அடையாளம் காண்பித்தனர். உடலை தேடும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கியது. தீயணைப்பு படையினர் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்கு பிறகு நேற்று காலை கிணற்றுக்குள் நீளமான பாறாங்கல்லில் கட்டப்பட்டு, எலும்புக்கூடாக கிடந்த வெண்ணிலாவின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். மருத்துவ பரிசோதனைக்காக அதை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

ஆணவக்கொலை

கைதான ஆறுமுகம் வெண்ணிலாவின் உறவினர் ஆவார். வேறு சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்ததால் வெண்ணிலா ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, செய்துங்கநல்லூர் போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *