புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசாத முதல்வர்: தென் மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் அழுத்தம் காரணமா?
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து எதுவும் பேசாததற்கு காரணம் தென் மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் அழுத்தம் காரணமா? என கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய இடங்களை கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இங்கு மத்திய குழுவினர் 2015-ம் ஆண்டு ஆய்வு செய்தனர்.
அதன்பின் கடந்த பிப்.27-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமரை சந்தித்து, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைக்க கோரிக்கை விடுத்தார். இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு செல்ல முயற்சி நடப்பதாகவும், அதன் பின்னணியில் பாஜக தலைவர்கள் சிலர் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நுகர்வோர், சேவை சங்கங்கள், அமைப்புகள் இணைந்து செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், புதுக்கோட்டையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மருத்துவமனையை திறந்து வைத்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இடம், இங்கிருந்து சுமார் 49 கி.மீ தொலைவுக்குள் இருப்ப தாலும், சுகாதாரத் துறை தொடர்பு டைய திட்டம் என்பதாலும் செங்கிப் பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து இந்த விழாவில் முதல்வர் பேசுவார் என மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
மேலும், தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனையை தென் மாவட்டங்களில் அமைக்க வேண்டும் என நேற்று கருத்து தெரிவித்ததால், முதல்வரின் பேச்சு மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து முதல்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
முதல்வர் நல்ல முடிவெடுப்பார்
இதுகுறித்து நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.சேகரன் கூறும்போது, “எய்ம்ஸ் மருத்துவமனையை செங்கிப் பட்டியில் அமைக்க வேண்டும் என முதல்வர் ஏற்கெனவே பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தி இருந்தார். அதேநேரத்தில், தென்மாவட்டங் களைச் சேர்ந்த அமைச்சர் உள்ளிட்ட சிலர் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளனர். தற்போதுள்ள அரசியல் சூழல், அழுத்தம் காரணமாக முதல்வர் இதுகுறித்து பேசாமல் இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன் கருதி நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்” என்றார்.
செங்கிப்பட்டியில்தான் எய்ம்ஸ்…
இதுகுறித்து டெல்டா பகுதியைச் சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் செங்கிப்பட்டிதான் சிறந்த இடம் என தமிழக அரசு எழுத்துப்பூர்வமாகவே மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டது.
இதுகுறித்து கடந்த மே 5-ம் தேதி தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடமிருந்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புதுகையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் இதுகுறித்து பேசாவிட்டாலும், செங்கிப்பட்டி யில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்” என்றார்.
“ஜெயலலிதா விரும்பிய இடத்தில் அமையும்”
புதுகை அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா முடிந்து, வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எய்ம்ஸ் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், “எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தமட்டில், அது எங்கே அமைய வேண்டுமென ஜெயலலிதா ஏற்கெனவே மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, அவரது விருப்பப்படி மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்கும் என நம்புகிறேன்” என்றார்.