பிளஸ் 1 சேர்க்கையில் வணிகவியல் பாடப் பிரிவை தேர்வு செய்ய ஆர்வம் காட்டும் மாணவர்கள்
பிளஸ் 1 சேர்க்கையில் வணிகவியல் பாடப்பிரிவை தேர்வு செய்ய மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கத்தை விட இந்த முறை கணிதப் பாடப்பிரிவை தேர்வு செய்யும் ஆர்வம் குறைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வில் 410 பள்ளிகளிலிருந்து தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் 36,835 பேரில் 32,689 பேர் தேர்ச்சி பெற்று,88.74 சதவீதத் தேர்ச்சியை எட்டினர்.
மேலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 1-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு, தற்போது சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
நடப்புக் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 தேர்வும், பொதுத்தேர்வு முறையில் நடத்தப்பட உள்ளது. இதில் வணிகவியல் பாடப்பிரிவை தேர்வு செய்வதில் மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பம் செய்துள்ள மாணவர் பிரவீன் கூறியதாவது: பொதுத்தேர்வு என்பது பற்றி எனக்குத் தெரியாது. எனது பெற்றோர் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்து பயிலச்சொன்னதால் பிளஸ் 1 வகுப்பில் இதனை தேர்வு செய்துள்ளேன் என்றார்.
அதே பள்ளி மாணவர் ஸ்ரீதர் கூறியதாவது: வணிகவியல் படித்தால் வங்கி வேலைக்குப் போக வாய்ப்புள்ளது. அதனால் இதனை தேர்வு செய்துள்ளேன் என்றார். முத்தாண்டிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வணிகவியல் பாடப்பிரிவில் சேர மாணவர்கள் விரும்புவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் தரிடம் கேட்டபோது கூறியதாவது: பிளஸ் 1 சேர்க்கையில் மாணவர்களைப் பொறுத்தவரை வணிகவியல் மற்றும் தொழில்பிரிவில் ஆர்வம் காட்டுகின்றனர். மாணவியர்கள் உயிரியல் மற்றும் வணிகவியல் பாடத் திட்டங்களை தேர்வு செய்கின்றனர். தற்போது கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. எங்கள் பள்ளியில் 135 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 90 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் வணிகவியல் பாடத்தையே தேர்வு செய்துள்ளனர் என்றார்.
இதே போன்று விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் உள்ளிட்டப் பகுதிகளிலும் வணிகவியல் பாடப்பிரிவை தேர்வு செய்வதிலேயே மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுவதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரம் மற்றும் பெரிய கிராமங்களில் மாணவ, ,மாணவியரிடையே இப்படி ஒரு மனநிலை காணப்படுகிறது. ஆனால் குக்கிராமப்புற மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியான பொதுத்தேர்வு முறை ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது. 10-ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என அடுத்தடுத்து பொதுத்தேர்வுகளை சந்திக்க குக்கிராம மாணவர்களிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளஸ் 1 சேருவதை காட்டிலும் ஐடிஐ, பாலிடெக்னிக் சென்று தொழில் படிப்புகளை படிக்கலாம் என்ற எண்ணம் கிராமப்புற மாணவர்களிடையே உருவாகியுள்ளது.