மதுரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பாஜக பெண் எம்.பி.
மேற்குவங்க பா.ஜ.க. பெண் எம்.பி. மதுரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர் வடஇந்திய வர்த்தகர்களுடன் ஆலோசனை செய்தார்.
மத்திய அரசின் மூன்றாண்டுகள் சாதனையையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் மேற்குவங்க பா.ஜ.க. (மாநிலங்களவை) எம்.பி. ரூபா கங்குலி கலந்து கொண்டார்.
முன்னதாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பின்பற்றும் வகையில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மதுரை புதூர் தேசிய விநாயகம் தெருவில் குப்பைகளை அள்ளும் பணியில் அவர் ஈடுபட்டார். பின்னர் ரூபா கங்குலி செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே பல இடங்களில் காணப்படுகின்றன. இது மாநாகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை காட்டுவதோடு, மனதுக்கும் வருத்தம் அளிக்கிறது. வீட்டைப்போல் நகர்ப்புற பகுதிகளில் தெருக்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தெருக்களில் உணவு உண்ணும்போது, கழிவுகளை அப்படியே போட்டுச் செல்லாமல் குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்றார்.
இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வட இந்தியர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் அவர் ஆலோசனை செய்தார். அப்போது ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு எளிமைப்படுத்த வேண்டும். மதுரையில் இருந்து ஜோத்பூருக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை எம்.பி.யிடம் வர்த்தகர்கள் முன்வைத்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலச் செயலர் சீனிவாசன், பொதுச் செயலர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் ஹரிகரன், மதுரை நகர் மாவட்டத் தலைவர் சசிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.