சென்னை- கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
ரூ.200 கோடி முதலீட்டில் சென்னை- கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். இதற்காக தமிழக அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஏற் படுத்தப்படும் என மத்திய அமைச் சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.1,492 கோடி செல வில் கன்டெய்னர் முனையம், பல சரக்கு முனையம், ரயில் இணைப்பு வசதி, மின்னணு அலுவலகம் மற்றும் ரேடியோ அலைவரிசை மூலம் கண்காணிக்கும் கருவி (ஆர்எப்ஐடி) ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இப்புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. நான் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகிப்பதற்கு முன்பு ஒரு நாளைக்கு 2 கி.மீ. தூரம் வரைதான் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது நாளொன்றுக்கு 23 கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், 16 ஆயிரத்து 800 கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
துறைமுகம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளின் கீழ், இந்தியா முழு வதும் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதில், ரூ.1.20 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்யப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக் கும்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் கட்டமைப்புகளை மேம் படுத்த ரூ.16 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். இதில், தமிழகத்தில் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். இஸ்ரோ விஞ்ஞானி கள் லித்தியம் மின்கலத்தை (பேட்டரி) உருவாக்கியுள்ளனர். இதைப் பயன்படுத்தி மின்சார வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வசதியை மேம் படுத்த மத்திய அரசு முக்கியத் துவம் கொடுத்து வருகிறது. இதன் படி, சென்னை-கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசுடன் இணைந்து ரூ.200 கோடி முதலீட்டில் ஒரு கூட்டு நிறுவனம் ஏற்படுத்தப்படும்.
சேதுசமுத்திரம் திட்டம்
சேதுசமுத்திரம் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. எனினும், இதற்காக ராமர் சேது பாலத்தை இடிக்கும் எண்ணம் ஏதும் கிடை யாது. இத்திட்டத்தை செயல் படுத்த 4, 5 வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த மத் திய அமைச்சரவையின் ஒப்புதலும் தேவைப்படுகிறது.
மத்திய அமைச்சரவை முடிவின் படி குளச்சல் துறைமுகம் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் நலன், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். எண்ணெய் கசிவால் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீட்டுத் தொகை இன்னும் 10 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில், தற்போது மத்திய அரசின் சார்பில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் 12 நீர்வழி போக்குவரத்து வழிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மாநில நிதியமைச்சர் டி.ஜெயக் குமார், “கப்பல் மோதிய விபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.203 கோடி இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், மாநில ஊரக தொழில்துறை அமைச்சர் பி.பெஞ்சமின், எம்பி பி.வேணு கோபால், எம்எல்ஏக்கள் பி.பல ராமன், கே.பி.பி.சாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, காமராஜர் துறைமுக தலைவர் கே.பாஸ்கராச்சார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.