தமிழகம் அமைதி பூங்கா: எடப்பாடி பேச்சு
ஜாதி, சமய, அரசியல் பூசல்கள் இல்லாமல் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டசபையில் 2 நாள் நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பதிலளித்தார்.
அவர் கூறியதாவது:–
முதன் முதலில் மதராஸ் காவல் துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை கணக்கிட்டுப் பார்த்தால்
நம் மகராசி அம்மாவின் ஆட்சிக் காலம்தான் காவல் துறைக்கு மறுமலர்ச்சிகள் பல தந்த மகத்தான பொற்காலம்.
தன் ஆட்சிக் காலத்தில் – அம்மா அதிகம் நம்பியதும், அளவின்றி நலத்திட்டங்களை நல்கியதும்,
காவல் துறையின் மேம்பாட்டுக்காக என்றால் அது மிகையல்ல!
காரணம், ஊர் மக்கள் அமைதியில் உறங்கிட உறங்காது கடமையாற்றும் உழைப்பு,
நீதியின் முன் குற்றவாளியை நிறுத்தும் வரை கால நேரம் கருதாது நித்திரை துறக்கும் விழிப்பு,
வரும் முன் காத்திடும் குற்றத் தடுப்பு, வந்ததும் விரைகிற குற்றக் கண்டுபிடிப்பு,
இழைத்தவர் குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில்
ஏறி ஏறி இறங்கும் ஏராள முனைப்பு, தாராளச் சகிப்பு, இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து
அவற்றை சிந்தையிலே பதித்து, காவலர்களுக்கு பூரணச் சுதந்திரத்தை வழங்கி,
தமிழகத்தின் காக்கிக் சட்டைக்கு மிடுக்கு குறையாத கம்பீரத்தை வழங்கியதும்,
நவீன ரக ஆயுதங்கள், அதிநவீன வாகனங்கள், சாதனை புரிவோருக்கு பதக்கங்கள்,
பரிசுகள், பதவி உயர்வுகள், உயிரை துச்சமாகக் கருதி உழைப்பவர்களுக்கு
வீர தீர வெகுமதிகள் என்றெல்லாம் உலகத்தின் தலைசிறந்த காவல்துறையாக
தமிழகத்தின் காவல்துறையை உயர்த்திக் காட்டிய நம் அம்மாவின்
பாதத் தடத்தில் சாண் அளவும் விலகாது
அம்மாவின் ஆசியோடு நடைபெறும் கழக அரசின் 2017–18ம் ஆண்டுக்கான காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான எனது பதிலுரையை இப்பேரவையில் சமர்ப்பிக்கின்றேன்.
‘படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு’
அதாவது சிறந்த படை, குடி, உணவு, அமைச்சு, நட்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்ட அரசு, பிற அரசுகளுள் சிறப்பான அரசாகும் என்று ஓர் நல்ல அரசின் இலக்கணங்கள் குறித்து திருவள்ளுவர் கூறுகிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான Simon Sinek என்பவர் ஒரு தலைவர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகையில்,
“Leadership is not about the next election, it’s about the next generation”,
அதாவது, தலைவர் என்பவர் அடுத்தத் தேர்தலைப் பற்றி எண்ணாமல், அடுத்த தலைமுறையைப் பற்றி எண்ண வேண்டும் என்றும், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த புகழ் வாய்ந்த எழுத்தாளரான Warren Bennis என்பவர்,
“Leadership is the capacity to translate vision into reality”, அதாவது, தான் நினைப்பதை செய்து முடிக்கும் திறன் படைத்தவராக ஒரு தலைவர் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அனைத்து குணநலன்களையும் ஒருங்கே பெற்று, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக அண்ணா தி்.மு.க.வின் தலைமைப் பொறுப்பேற்று, அரசியல் எதிரிகளின் பல்வேறு சூழ்ச்சிகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து, அண்ணா தி.மு.க..வை வரலாறு காணாத வெற்றியை நோக்கி, மாநிலத்தின் அமைதி, வளம், வளர்ச்சியையே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட அம்மாவுக்கு எனது நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.
உறுதி
அம்மா வகுத்து தந்த பாதையிலே அவரது கொள்கைகளையும், குறிக்கோள்களையும் பின்பற்றி மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை அம்மாவின் அரசு தொய்வின்றி நிறைவேற்றும் விதத்தில் தொடர்ந்து செயல்படும் என உறுதியளிக்கின்றேன்.
பொதுவாக எந்தவொரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நல்லமுறையில் பேணிக்காக்கப்பட்டு, அமைதி நிலவுகிறதோ அம்மாநிலத்தில், செழுமையும், வளமையும் ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் பெருகி, தனிநபர் வருவாய் அதிகரித்து, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
மேலும், ஒரு அரசானது, மக்களின் உரிமைகளை பாதுகாத்து, சாதி, மத வேற்றுமைகளை நீக்கி, ஏழை, பணக்காரர் இடையே ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, சிறுபான்மை மற்றும் பெரும்பான்மையினர் ஒற்றுமையாக இருக்க வழிவகுத்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை நிலை நிறுத்தி சமூக நீதியை நிலைநாட்டி ஆட்சி செய்யும் பட்சத்தில் அவ்வரசு மக்கள் நலன் காக்கும் அரசாகக் கருதப்படுவதோடு, மக்கள் விரும்பும் நல்ல அரசாகவும் விளங்கும்.
அரசு கொண்டு வரும் திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு, மாநிலம் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய வேண்டுமெனில்,
நம் நாட்டு தொழில் முனைவோர்களும், பன்னாட்டு நிறுவனங்களும், மாநிலத்தில் முதலீடு செய்து தொழில் துவங்க முன்வர வேண்டும் என்றால்,
அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, பொது அமைதி நிலவ வேண்டும்.
அமைதிப் பூங்கா
இதை உணர்ந்த அம்மா, தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, காவல் துறையினர் எவ்வித குறுக்கீடும் இன்றி, சுதந்திரமாக தங்கள் பணிகளை நேர்மையாகவும், செம்மையாகவும் மேற்கொள்ள முன்னுரிமை அளித்து சரியான சூழ்நிலையை ஏற்படுத்தி தந்து, அவர்களுக்கு தேவையான நவீன வசதிகளையும் செய்து கொடுத்து வந்தார்.
அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, காவல் துறையினரின் பணிகளில் தலையீடு ஏதுமில்லாமல் பார்த்துக் கொண்டு வருவதுடன், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றியும், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் குறை கூறியும், எதிர்மறையான கருத்துக்களையும் இம்மாமன்றத்தில் எடுத்துரைத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை அவரவர் கண்ணோட்டத்திற்கு தக்கவாறும், அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் எடுத்துரைத்துள்ளார்கள்.
போதுமான தகவல்கள் இல்லாமலும், அடிப்படை ஆதாரமில்லாமலும் ஒரு விவாதத்தில் ஈடுபடுபவர்கள், விவாதத்தை தனிப்பட்ட தாக்குதலில் தான் முடிப்பார்கள்.
குறுகிய மனப்பான்மை
அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினாலோ அல்லது ஒரு கொள்கை முடிவு எடுத்தாலோ அல்லது ஒரு அரசாணை வெளியிட்டாலோ அதில் காணும் நிறைகள் அவர்களுக்கு தெரிந்தாலும், எங்கு அரசின் திட்டத்தினாலோ அல்லது கொள்கை முடிவினாலோ அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடுமோ என்ற குறுகிய மனபாங்குடன் அதை தடுக்கும் நோக்கத்தில் சிறிய குறைகளையும் பூதாகரமாக்கி அறிக்கைகள் விடுவது, பேட்டியளிப்பது, போராட்டங்கள் நடத்துவது, போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒரு சிலர் அன்றாட வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு ஜனநாயகத்தில் எவருக்கும் உரிமை உள்ளது என்றாலும், அவ்வுரிமையை முறையாகப் பயன்படுத்துகிறோமா? இதனால் மக்களுக்கு பயன் ஏதேனும் ஏற்படுமா? – என்பது பற்றி சிந்திக்காமல், அவர்கள் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற ஓரே நோக்கில் தினமும் தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளில் தங்களைப் பற்றி செய்தி வந்தால் போதும் என்ற அளவிலேயே இந்நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
உண்மையில் குறைகள் ஏதும் இருக்குமாயின், அவற்றை மாற்று கட்சி உறுப்பினர்கள் நியாயமான முறையில் அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் போது, அரசு பரிசீலித்து அக்குறைகளை களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வாறு இல்லாமல் அரசின் நல்ல திட்டங்களையும், மாநில அரசின் ஆளுகைக்குட்படாத சில பிரச்சினைகளையும் கையிலெடுத்துக் கொண்டு அவை குறித்து குறை கூறும் போது அச்செயல்பாடுகள் அரசை காரணமின்றி குறை கூறும் அவர்களது மன நிலையைக் காட்டுகிறது.
மக்களை குழப்ப….
கடந்த ஆறு ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசின் சீரிய அறிவுரைகளின் பேரில், தமிழக காவல்துறை, மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள், கொள்ளையர்கள், வழிப்பறி கொள்ளையர்கள், சமூக விரோதிகள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து சட்டம் ஒழுங்கை எந்தவொரு தொய்வுமின்றி பராமரித்து வருவதுடன், சாதி, சமய மற்றும் அரசியல் பூசல்கள் ஏதும் நிகழாமல் தமிழ்நாட்டை ஒரு அமைதி பூங்காவாக பேணி காத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, திமுக தலைவரும் அதன் நிர்வாகிகளும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அம்மாவின் நல்லாட்சியின் போது, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்றும், பொது அமைதி பாதிக்கப்பட்டுவிட்டது என்றும், தொடர்ந்து ஊடகங்களிலும், பொதுமக்களை நேரடியாக சந்தித்தும் உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்து வந்தனர். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் போது அது உண்மையாகிவிடும் என கருதி உண்மைக்கு மாறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களை குழப்ப பல்வேறு யுக்திகளை கையாண்டனர்.
சட்டம் ஒழுங்கு
நல்லமுறையில் பராமரிப்பு
ஆனால், பொதுமக்களின் மன நிலை வேறுவிதமாக இருந்ததோடு, மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சித் தொடர வேண்டுமென்று முடிவெடுத்து வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். இதன் மூலம் அக்குற்றசாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு மாறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என நிரூபணமானது. மேலும், சட்டமன்ற தேர்தல், மாநிலத்தில் முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதுவே, கடந்த ஆறு ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இவ்வாறு எடப்பாடி கூறினார்.