போக்குவரத்து தொழிலாளர்கள் நிலுவை தொகை முழுவதுமாக செப்டம்பருக்குள் வழங்கப்படும்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.1250 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள தொகை செப்டம்பர் மாத்திற்குள் வழங்கப்படும் என்று சட்டசபையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தி.மு.க. உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்தார்.
சட்டமன்றத்தில் இன்று போக்கு வரத்துத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
தி.மு.க. சார்பில் சுரேஷ் ராஜன் பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில் வருமாறு:–
காற்று மாசை குறைப்பதற்காக பேட்டரியால் இயங்கும் பஸ் இயக்கப்பட வேண்டும் என உறுப்பினர் கோரியிருக்கிறார். அவர் பத்திரிகைகளை பார்த்து இருப்பார் என நினைக்கிறேன். பேட்டரி பஸ்களை சோதனை ஓட்டமாக இயக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை செய்தியாக பார்த்திருப்பார்.
சென்னையில் பேட்டரி பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வரின் அனுமதி பெற்று பேட்டரியால் இயங்கும் பஸ்கள் இயக்கப்படும்.
பழைய பேருந்து பற்றி உறுப்பினர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில், 74 புதிய பணிமனைகள் திறக்க உத்தரவிடப்பட்டு 40 பணிமனைகள் திறக்கப்பட்டுள்ளது. 2 பணிமனைகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
புதிய பணிமனைகள் திறந்து பேருந்து பராமரிக்கப்பட்டு, நல்ல முறையில் இயக்கப்பட்டு வருகிறது. சென்ற நிதி ஆண்டில் 2 ஆயிரம் பஸ்கள் வாங்க ஜெயலலிதா ஆணை பிறப்பித்தார். அந்த பஸ்கள் விரைவில் வாங்கப்படும்.
உறுப்பினர் குறிப்பிட்டது போல், பணிமனைகளில் தொழிலாளர்கள் குறைப்பு செய்யப்படவில்லை. போதுமான சதவீதத்தில் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில்
42 புதிய பணிமனைகள்
கடந்த தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் 10 புதிய பணிமனைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இதுவரை 42 புதிய பணிமனைகள் திறக்கப்பட்டு இருக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் நிலுவை தொகை ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் இருக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக நிலுவை தொகை இருந்து வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் 2 ஆயிரம் கோடி நிலுவை தொகையில் ரூ.1,250 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கி தந்துள்ளார். உங்களது ஆட்சியில் ரூ.2,500 கோடி நிலுவை தொகை இருந்தது.
உங்களது ஆட்சியிலும், எங்களது ஆட்சியிலும் நிலுவை தொகை இருந்து இருக்கிறது. ஆனால் ஒரே தவணையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி நிலுவை தொகையை வழங்கியது ஜெயலலிதா ஆட்சி தான்.
தமிழகத்தில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட பஸ்கள் இருக்கின்றன. அவற்றை பராமரிக்க பணிமனைகள் மிக அவசியமாகும்.
இந்த ஆட்சியில் 42 புதிய பணிமனைகளை திறந்திருக்கிறோம். போக்குவரத்து கழகத்திற்கு ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட நிதி 4,348 கோடி ரூபாய் ஆகும். ஆனால் தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட தொகை 3,685 கோடி மட்டும்.
பத்திரிகையில் வந்த செய்தியை ஏதோ ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது போல் உறுப்பினர் கூறுகிறார்.
போக்குவரத்து கழங்கங்களில் பற்றாக்குறை உங்கள் ஆட்சியிலும் இருந்தது. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ. 966 கோடி செப்டம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும். வழங்கப்பட்டு விட்டால் நிலுவை தொகையே இல்லை என்ற நிலையை இந்த ஆட்சி உருவாக்கும்.
நிலுவை தொகை தொடர்பாக உறுப்பினர் குற்றம் சாட்டுகிறார். நிலுவை தொகை வழங்காததால் தான் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதாக உறுப்பினர் குறிப்பிடுகிறார். அது உண்மையல்ல.
முதல்கட்டமாக ரூ.500 கோடி நிலுவை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர் தான், போராட்டம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது ரூ.500 கோடி போதாது என்பதால், மேலும் ரூ.250 கோடி ஒதுக்கி மொத்தம் ரூ.750 கோடி நிலுவை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
செப்டம்பர் இறுதியில் மேலும் ரூ.500 கோடி தருவதாக தெரிவித்தோம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தி.மு.க. தொழிற்சங்கமும், சி.ஐ.டி.யூ. தான் போராட்டத்தை நடத்தியது.
அதை தொடர்ந்து மூத்த அமைச்சர்களுடன் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில், ரூ.1,250 நிலுவை தொகை கொடுக்கிறோம் என அறிவித்தோம். செப்டம்பர் மாதத்திற்க்குள் கொடுப்பதாக அறிவித்த நிலையில் போராட்டம் அவசியமில்லை. அரசியல் நோக்கத்திற்காக தான் தி.மு.க.வும், சி.ஐ.டி.யூ.ம் போராட்டம் நடத்தின என்றார்.
உண்மைக்கு மாறானது
அப்போது செங்கோட்டையன் குறுக்கிட்டு போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கமும் கலந்து கொண்டதாக, உறுப்பினர் கூறுகிறார். அது உண்மைக்கு மாறானது. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.
அதை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், உறுப்பினர் குற்றச்சாட்டுகளை தெரி விக்காமல், கோரிக்கைகளை மட்டும் சொன்னால், குறுக்கீடு இருக்காது. குற்றச்சாட்டுகளை சொன்னால் பதில் அளிக்க வேண்டி இருக்கும்.
போக்குவரத்து துறையானது, வருவாயை ஈட்டும் துறை அல்ல. அது மக்களுக்கு சேவை செய்யும் துறை ஆகும். அரசு பேருந்துகள் மக்களின் சேவைக்காகவே இயக்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சாலை போக்குவரத்து மசோதா புதிய போக்குவரத்து கொள்கைகளை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் இந்த மசோதாவை முழுமையாக எதிர்ப்பது தமிழகம் மட்டுமே.
தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் சில திருத்தங்கள் செய்துள்ளனர். மேலும் திருத்தங்கள் தேவை என்று முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அந்த மசோதாவில் திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அப்போது தான் போக்குவரத்து கழகங்கள் நல்ல முறையில் இயங்கும்.
இது தொடர்பாக மற்ற மாநில அமைச்சர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மசோதாவில் திருத்தம் கொண்டு வர ஜெயலலிதா அரசு முழு அளவில் நடவடிக்கை மேற்கொள்ளும்.
ஜி.எஸ்.டி. வரி பற்றி உறுப்பினர் கேள்வி எழுப்பி உள்ளார். குளிர்சாதன பஸ்களில் 5 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. தான் காரணம். இதற்கும், மாநில அரசுக்கும் சம்பந்தமில்லை.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் வேலை மட்டும் தான் நம்முடையது. மற்ற விஷயத்தை எல்லாம் மத்திய அரசு தான் மேற்கொள்ள வேண்டும் என்றார்.