10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை? சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை யொட்டி விடுவிக்க அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது என்றும், அந்த ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் காவல் துறை, தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பதிலுரை வழங்கினார்.
அதை தொடர்ந்து 54 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து பேசினார்.
ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக நீதிபதி ராஜசேகரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிஷன் 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
ஆனால் மேலும் 3 மாதங்கள் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்பட வில்லையா? அல்லது மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதா?
அதேபோல் உணவு பாதுகாப்பு சட்டம் வந்தால், மானியம் வழங்கப்படுமா? என கேட்டதற்கு அமைச்சர் வழங்கப்படும் என நேற்று தெரிவித்துள்ளார்.
ஆனால் உயர் அதிகாரி எழுதிய கடிதத்தில் வேறு மாதிரி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சொன்னது சரியா, அல்லது உணவுத் துறை செயலாளர் சொன்னது சரியா?
அதேபோல் பேரறிவாளனை பரோலில் விடுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பதில் அளிக்கையில், எதிர்க்கட்சி தலைவர், ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அந்த கமிஷனை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் அளித்து அரசாணை பிறப்பிக்கபட்டது. விசாரணை நடைபெற்று இருந்த நிலையில் நீதிபதி ராஜசேகரன் கோரியதை ஏற்று கால அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார்.
அதை தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறும்போது, உணவு பாதுகாப்பு சட்டத்தால், மானியம் வழங்குவது நிறுத்தப்படாது. எப்போதும் போல் மானியம் வழங்கப்படுவது நீட்டிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். செயலாள ருக்கும், ஆணையருக்குமான கடிதம் ஆலோசனை தொடர்பானது.
முன்பு இருந்ததை போலவே உணவு பாதுகாப்பு சட்டம் வந்தாலும், மானியம் முழுமையாக வழங்கப்படும் என்றார்.
அரசு பரிசீலனையில்
பேரறிவாளன் விவகாரம்
அதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது,
உறுப்பினர் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, சட்டப் பேரவைத் துணைத்தவர், சட்டமன்றப் பேரவையில் உள்ள பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கக் கூடிய சட்டப் பேரவை உறுப்பினர்களும், பெரும்பாலானோர், ஆளுகின்ற கட்சியிலே இருக்கின்ற அமைச்சர்கள் சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைவரும் தங்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்ற விதத்திலே பேரறிவாளனை பரோலில் விட வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கின்றார்கள்.
ஏற்கனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரும், 15 நாட்களுக்கு முன்பு என்னுடைய அறைக்கு வந்து, பேரறிவாளனை பரோலிலே விட வேண்டும். நீண்ட நெடு நாட்களாக சிறையிலே வாடிக் கொண்டிருக்கிறார். அவரை சிறையிலிருந்து நீங்கள் பரோலிலே விடுவதற்கு ஆவன செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை என்னிடத்திலே வைத்தனர்.
அவர்களுடைய கோரிக்கை மனுவை, உடனடியாக நானும், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும் கலந்து பேசி, நம்முடைய அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பி, சட்ட ஆலோசகரிடமிருந்து ஆலோசனை பெற்று, அதை பரிசீலனை செய்து கொண்டிருக்கும்போது தான், நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் நேற்றும் இன்றும் அந்தப் பிரச்சனையை எழுப்பினார்.
அவருக்கு நான் பதில் சொல்கின்றபோது ‘இது பரிசீலிக்கப்படும்’ என்ற அறிவிப்பைத் தந்திருக்கின்றேன். ஆகவே, அனைவருடைய உணர்வுகளையும் அரசு கவனத்திலே எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும்.
பின்னர் தி.மு.க. உறுப்பினர் ஜெ. அன்பழகன் பேசும்போது, முதல்வரிடம் சில கோரிக்கைகளை வைக்கிறேன். தலைவர்கள் பிறந்தநாளில் சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு சிறை வாசம் அனுபவித்து வரும் கைதிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்ய அரசு முன் வர வேண்டும்.
அதேபோல் காவலர் நல சங்கம் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மே 17 இயக்கத் தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என உறுப்பினர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கைதிகளை விடுப்பது தொடர்பாக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார்.