செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடும் நடவடிக்கையைக் கைவிடுக: மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைத்துவிடும் முயற்சியை கைவிடுமாறு மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சென்னையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைத்துவிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நடவடிக்கையை உடனே கைவிடவேண்டுமென மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவு திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களும்நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதித்து அதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அறிகிறோம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் செம்மொழி நிறுவனங்களையும்கூட ஆங்காங்கே இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களோடு இணைத்துவிட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவெடுத்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்ற தகுதியை இழக்கும். அதன் நிதி மற்றும் நிர்வாக அதிகாரம் யாவும் பல்கலைக்கழகத்திடம் சென்றுவிடும். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) மூலம் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் அவர்கள் ஏதேனும் ஒதுக்கினால் அதைக் கொண்டுதான் அது இனிமேல் செயல்படவேண்டும் என்ற நிலை உருவாகும். அது பல்கலைக் கழகத்தின் துறைகளில் ஒன்றாக குறுக்கப்பட்டுவிடும்.
தமிழைச் செம்மொழியாக அறிவிக்கவேண்டும் என்பதற்காக சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் முதலான அமைப்புகளும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் ஜான்சாமுவேல், திரு. மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராசன், முனைவர் பொற்கோ முதலான தமிழறிஞர்களும் தொடர்ந்து போராடி வந்தார்கள். திமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.
திமுக தலைவர் கலைஞர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் காரணமாக 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெறப்பட்டது. அதன்பிறகு அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் மைசூரில் இயங்கிவந்த செம்மொழி நிறுவனம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது.
அப்படிப் போராடிப் பெற்ற உரிமையைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக இன்றைய பாஜக அரசின் நடவடிக்கை உள்ளது. இதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
பாஜக அரசு தனது தமிழ் விரோத நடவடிக்கையை உடனடியாகக் கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் காக்க அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்பவேண்டும் என அழைக்கிறோம்.