விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன: வாசன் குற்றச்சாட்டு
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கக் கூடிய எந்தவித நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கத் தவறிவிட்டன என்று தமாகா தலைவர் வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”விவசாயிகளின் கடன்களை வசூல் செய்ய வங்கிகள் விவசாயிகளுக்கு எந்தவித நிர்பந்தமும், நெருக்கடியும், கொடுக்கக் கூடாது, ஜப்தி நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
1995-ஆம் ஆண்டு முதல் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றனர். 2015-ஆம் ஆண்டு 12,602 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றனர் என்று தேசிய குற்றப்பிரிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
இயற்கை சூழ்நிலையால் வானம் பொய்த்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்து நமக்கு முறையாக பெறக்கூடிய தண்ணீர் கிடைக்காமலும், விவசாயம் செய்ய முடியாமல் அவதியுறும் இவ்வேலையில் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளின் கடன்களை வசூலிக்க ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடும்போது, சுயமரியாதையை இழக்கும் விவசாயிகள் தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களது தற்கொலைக்கான காரணத்தை அறிந்து அவற்றை போக்காமல், தற்கொலையை தடுக்கக் கூடிய எந்தவித நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க தவறிவிட்டன.
தமிழக அரசு, தமிழ்நாடு வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று ஒருமனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசிற்கு அனுப்பியிருந்த நிலையில், தமிழக மூத்த வழக்குறிஞர் தமிழகத்தில் முழுவறட்சி இல்லை ஆங்காங்கே ஒரு சில இடங்களில்தான் வறட்சி என உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்து வாதாடியிருப்பது விவசாயிகளின் மத்தியில் அதர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலையில் இறந்த குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதை விட, தமிழக அரசு வங்கிகளின் கடன் வசூல் கெடுபிடியில் இருந்தும், ஜப்தி நடவடிக்கையில் இருந்து தடுத்து விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு லாபகரமான உரிய விலை கிடைக்க செய்வதனாலயே தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து வேதனை விளிம்பில் இருந்து காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், அதை அரசும், வங்கிகளும் பின்பற்ற வேண்டும்” என்று வாசன் தெரிவித்துள்ளார்.