ஆந்திர மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவும் சூழலில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், பல நகரங்களில் வெப்பநிலை குறைந்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.