மருத்துவ காப்பீடுத் திட்ட பயனாளிகளிடம் சிகிச்சைக்கு கூடுதலாக பணம் வாங்கினால் 5 மடங்கு அபராதம்: மருத்துவ காப்பீடுத் திட்ட கூடுதல் இயக்குநர் எச்சரிக்கை

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்ட பயனாளிகளிடம் சிகிச்சைக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணம் வசூலிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட மருத்துவமனைக்கு அத்தொகை யைப் போல் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என மருத்துவ காப்பீடுத் திட்ட கூடுதல் இயக்குநர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் விரிவான காப்பீடுத் திட்ட மண்டல அளவிலான கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற காப்பீடுத் திட்ட கூடுதல் இயக்குநர் செல்வவிநாயகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

20 லட்சம் பேருக்கு சிகிச்சை

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 20 லட்சம் பயனாளிகளுக்கு சிகிச்சைக்காக ரூ.4 ஆயிரத்து 66 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 522 குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை தேவைப்படுபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் ஆண்டு வருமானச் சான்று பெற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்துக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் 1,027 நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள், 154 தொடர் சிகிச்சைகள், 38 வகையான நோய் கண்டறியும் பரிசோதனைகள், 8 வகையான உயர் அறுவை சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளன. 5,043 பயனாளிகளுக்கு ரூ.358 கோடி செலவில் உயர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பணம் வாங்கினால் நடவடிக்கை

மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டாலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணம் வசூலிக்கப் பட்டாலோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பு மற்றும் குறை தீர்க்கும் குழுவில் புகார் அளிக்கலாம். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 18004253993-ல் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.

இத்திட்டத்தில் பயனாளிகளிடம் இருந்து ஏதேனும் பணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அத்தொகையின் மீது 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும். பயனாளிகளிடம் வசூலிக்கப்பட்ட தொகையை திரும்பக் கொடுத்து, அதற்கான சான்றை சம்பந்தப்பட்ட மருத்துவமனை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் 346 மருத்துவமனைகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காப்பீடுத் திட்டத்தில் புகார்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க 32 மாவட்டங்களிலும் புலனாய்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் தலைமையிலான இக்குழு நோயாளியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்து, தகவல் அளிப்பார்கள். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர் ராம்கணேஷ், காப்பீடுத் திட்ட துணை இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *