ஜிஎஸ்டியால் சரக்கு லாரிகள் ஓடவில்லை: மதுரையில் தினமும் ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு
மதுரையில் ஜி.எஸ்.டி.யால் சரக்கு லாரிகள் ஓடவில்லை. தினமும் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படுவதாக லாரி புக்கிங் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஒரு லட்சத் துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 70 ஆயிரம் லாரிகள் வெளிமாநிலங்களுக்குச் செல்கின்றன. மதுரையில் 600-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் ஓடுகின்றன. மதுரையில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமே 150-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன. இதற்காக 200-க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் மதுரை கீழமாரட் வீதி, வடக்குமாசி வீதி, திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன.
பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் இருந்து கொள்முதல் பகுதிக்கும், கொள்முதல் இடத்தில் பிற சில்லறை வியாபாரிகளுக்கும் பொருட்களை கொண்டு செல்லும் பதிவு பெற்ற சரக்கு லாரிகளுக்கு ஜிஎஸ்டியில் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை பேருந்து, சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லும்போது, ஜிஎஸ்டி பில்கள் இன்றி கொண்டு செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் தவறு தெரிந்தால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்குரிய ஜிஎஸ்டி வரியுடன் கூடுதலாக 100 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால், கடந்த ஒரு வாரமாக மதுரையில் பெரும்பாலான லாரிகளில் சரக்குகளை ஏற்றிச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களிலும் சரக்கு புக்கிங் பாதித்துள்ளது. இது குறித்து மதுரை சரக்கு லாரி சங்கத் தலைவர் காளியப்பன் கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி பில் இன்றி சரக்குகளை கொண்டு செல்லக் கூடாது என உத்தரவு உள்ளது. வர்த்தகர்கள் பலருக்கு ஜிஎஸ்டி குறித்து தெளிவான முடிவு தெரியவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மதுரையில் சரக்கு லாரிகள் ஓடவில்லை. வெளி மாநிலங்களிலும் சரக்குகள் புக்கிங் செய்யத் தயக்கமாக உள்ளது.
இதனால் தொடர்ந்து சரக்கு லாரி வர்த்தகம் பாதிக்கிறது. மதுரையில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. லாரி செட் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இன்றி உள்ளனர் என்றார்.
லாரி புக்கிங் நிறுவன உரிமை யாளர் ஜெயராஜ் கூறுகையில், ஜிஎஸ்டி குறித்து அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சரியாகப் புரியவில்லை. 5, 12, 18, 28 சதவீதம் என சுமார் 1,200 பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த லாரி உரிமையாளர்களும் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஒரு லாரி வைத்திருந்தாலும், ஜிஎஸ்டிக்குள் வரவேண்டும்.
ஜிஎஸ்டி வரியோடு கூடிய பில் இல்லாததால் லாரிகளில் சரக்கு ஏற்ற தயக்கமாக உள்ளது. அதிகாரிகள் ஆய்வில் பிடித்தால் அபராதம் செலுத்த வேண்டும். சரக்கு லாரி வர்த்தகம் பாதிப்பை தடுக்க, ஜிஎஸ்டி வரி நடைமுறையை அனைத்து தரப்பினருக்கும் சரியான முறையில் விளக்கி, சீரமைக்க வேண்டும் என்றார்.