புதுவையில் நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசுதான் நேரடியாக நியமித்தது: ஆளுநர் கிரண்பேடி
புதுவையில் நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசுதான் நேரடியாக நியமித்தது. நான் பரிந்துரை செய்யவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கமளித்தார்.
குஜராத் சென்றிருந்த ஆளுநர் கிரண்பேடி வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரி வந்தார். சனிக்கிழமை தோறும் சைக்கிளில் சென்று தூய்மை இந்தியா திட்டத்தை பார்வையிடுவார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக பந்த் போராட்டம் இன்று தொடங்கியது. அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடி சைக்கிளில் ராஜ்நிவாஸிலிருந்து புறப்பட்டார். ஆளுநருக்கு எதிராக பந்த் நடப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள லாஸ்பேட்டை தேசிய மாணவர் படை வளாகத்துக்கு கிரண்பேடி சென்றார். மாணவ, மாணவியரிடத்தில் தூய்மை இந்தியா தொடர்பாக அவர் பேசினார் அதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக பந்த் நடப்பது தொடர்பாக கேட்டதற்கு, தனக்கு எதிராக போராட்டங்களும் பந்த் போராட்டம் நடப்பது ஆச்சரியம் தருகிறது. முதல்முறையாக எனது சேவைக்கு எதிராக பந்த் நடக்கிறது. பந்தால் புதுச்சேரியின் வருமானமும், வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நியமன எம்எல்ஏக்களை ஏன் பரிந்துரை செய்தீர்கள் என்று கேட்டதற்கு, “நியமன எம்எல்ஏக்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு சட்டப்படி நேரடியாக நியமித்துள்ளது. இது அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அது சரி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கிரண்பேடி சைக்கிளில் ராஜ்நிவாஸ் புறப்பட்டார்.