சென்னை- திண்டுக்கல் அகல ரயில் பாதை பணி ஓராண்டில் முடிவடையும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்
சென்னையில் இருந்து திண்டுக்கல் வரை இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஓராண்டுக்குள் முடிவடையும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோரி தெரிவித்தார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோரி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனுஇட்டியாரா ஆகியோர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பயணிகளுக்கு டிக்கெட்டுகள் தடையின்றி வழங்கப்படுகிறதா? நடைமேடை டிக்கெட்டுகள் தானியங்கி கருவி மூலம் வழங்குவது, பயணிகளுக்கான சுகாதார வசதிகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தனர்.
பின்னர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் இருந்து திண்டுக்கல் வரை இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஓராண்டுக்குள் முடிவடையும். மதுரை-போடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி முதல் கட்டமாக மதுரையில் இருந்து 38 கி.மீ. வரை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும். செங்கோட்டை-புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும்.
எர்ணாகுளத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் போதிய வருவாய் கிடைக்காததால் நிறுத்தப்பட்டுள்ளது.
அரசுகள் நிதி ஒதுக்கவில்லை
திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்கும் பணிக்கு தமிழக, கேரள மாநில அரசுகள் நிதி ஒதுக்கவில்லை. போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இத்திட்டம் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது என்றார்.