380 டன் பாறையில் செய்த சாமி சிலையை வாகனத்தில் எடுத்து செல்ல தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

80 டன் பாறையில் செய்த சாமி சிலையை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வாகனத்தில் எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
380 டன் பாறையில் செய்த சாமி சிலையை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வாகனத்தில் எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
பெங்களூருவைச் சேர்ந்த கோதண்டராமசுவாமி அறக்கட்டளை ஒரே கல்லால் ஆன பிரமாண்டமான சாமி சிலையை வடிவமைக்க திருவண்ணாமலை மாவட்டம் கோரக்கோட்டை கிராமத்தில் சேட்டிலைட் மூலமாக ஒரு பாறையை கண்டுபிடித்தது.
120 அடி நீளம், 33 அடி அகலம், 15 அடி உயரத்துடன் கூடிய அந்த பாறை 380 டன் எடை கொண்டதாகும். இதில், சாமி சிலையை வடிவமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த பாறையில் தற்போது சாமியின் முகம் மற்றும் கைகள் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த சாமி சிலையோடு 24 அடி நீளம், 64 அடி அகலத்துடன் 260 டன் எடை கொண்ட மற்றொரு பாறையையும் 170 டயர்கள் கொண்ட கனரக லாரி மூலமாக சாலை மார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கு எடுத்து செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதிக எடை கொண்ட சிலை மற்றும் பாறையை சாலை மார்க்கமாக முன்னெச்சரிக்கை இல்லாமல் எடுத்துச்செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் சாலைகளில் செல்பவர்களுக்கும், வழி நெடுகிலும் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பாதுகாப்பு கருதி சாமி சிலை மற்றும் பாறையை சாலை மார்க்கமாக எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சத்யராஜ் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *