இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வாருங்கள்: ஜி 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வருமாறு ஜி 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வருமாறு ஜி 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற தேவையான எச்1பி விசா வழங்குவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால், இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் உள்பட பல்வேறு நாட்டு இளைஞர்களுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் இறுதி நாளில், பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக பேசினார். அப்போது, டொனால்டு டிரம்பும் அங்கு இருந்தார்.
மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:-
வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜி 20 நாடுகள் முன்வர வேண்டும். அதுதான், வேலை வழங்கும் நாட்டுக்கும் நல்லது, அந்த இளைஞர்களின் நாட்டுக்கும் நல்லது. வேலைவாய்ப்பு மூலம் வளர்ச்சியும் பெருகும்.
தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல், உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது. யோகா பயிற்சியின் மூலம், நோய்களை வர விடாமல் தடுக்க முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்துக்கு சமீபத்தில் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த ஒப்பந்தம் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு சாதகமாக இருப்பதாக கூறி, ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
ஆனால், ஜி 20 நாடுகள் மாநாட்டில், இந்தியாவும், இதர 18 நாடுகளும் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு உறுதியான ஆதரவு தெரிவித்தன. அந்த ஒப்பந்தம், திரும்பப்பெற முடியாதது என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கூறினார்.
இதனால், இந்த விவகாரத்தில், அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜி 20 மாநாடுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று இரவு இந்தியாவுக்கு புறப்பட்டார். இதன்மூலம், இஸ்ரேல், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அவர் மேற்கொண்ட 5 நாள் சுற்றுப்பயணம் முடிவடைந்தது.