மகளிர் உலகக்கோப்பை: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி
மகளிர் உலகக்கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்கள் உலகக்கோப்பை தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லிஸ்லி லீ 65 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். கேப்டன் டேன் வான் நீகெர்க் 57 (66) ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஷிக்கா பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிஸ்ட், கவுர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கணைகள் நிதானமாக ஆட்டத்தை தொடங்க, மறுபக்கத்தில் விக்கெட்டும் சரிந்து வந்தது. தீப்தி ஷர்மா நிலைத்து நின்று 60 (111) ரன்களும், ஜுலான் கோஸ்வாமி 43 (79) ரன்களும் குவித்தனர்.
கேப்டன் மித்தாலி ராஜ், கவுர், ஷிக்கா பாண்டே, பூனம் பாண்டே ரன்கள் ஏதுமின்றி வெளியேற இந்திய அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் வான் நீகெர்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்ற இந்திய அணி, இந்த உலகக் கோப்பை சீசனில் முதல் தோல்வியை பதிவு செய்தது.