அமெரிக்க ராணுவத்தில் சேர முயன்ற இந்திய வம்சாவளி வாலிபர் கைது
ஐ.எஸ். ஆதரவாளராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் அமெரிக்க ராணுவத்தில் சேர முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் நார் போல்க் பகுதியை சேர்ந்தவர் சிவம் படேல் (27). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சமீபத்தில் இவர் அமெரிக்க ராணுவம் மற்றும் விமானபடையில் சேர விண்ணப்பம் செய்திருந்தார்.
அதில் தான் கடந்த 7 ஆண்டுகளாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. குடும்ப விழாவுக்காக 2011-12-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு சென்று வந்தேன் என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து அவரது தந்தையிடம் விசாரித்த போது சிவம்படேல் முஸ்லிமாக மதம் மாறியது தெரிய வந்தது. மேலும் இவர் சீனா மற்றும் ஜோர்டானுக்கு பயணம் செய்து இருப்பதும் கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அவரது அறையை அமெரிக்க உளவுப்பிரிவு போலீசார் சோதனையிட்டனர்.
அதில் அவர் இன்டர்நெட்டில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பத்திரிகையில் இருந்து செய்திகளை எடுத்து இருந்தார். அந்த இயக்கத்தில் சேருவது எப்படி என்ற தகவல்களை சேகரித்து வந்தார்.
மேலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக நிதி உதவி திரட்டி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.