அணு ஆயுதத்தை தடை ஒப்பந்தம்: இந்தியா புறக்கணிப்பு
அணு ஆயுதங்களை தடைச் செய்யும் ஐ.நா.வின் சர்வதேச ஒப்பந்தம் 122 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துள்ளன.
அணு ஆயுத போரை தடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஐ.நா. சபையில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சிகள் நடைபெற்று வந்தன.
அதன் அடிப்படையில், ஐ.நா. சபையின் பெரும்பாலான நாடுகள் அளித்த பரிந்துரைகளின் படி அணு ஆயுத தடை ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து நேற்று முன் தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 124 நாடுகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், அணு ஆயுதங்களை தடைச் செய்யும் ஐ.நா.வின் சர்வதேச ஒப்பந்தம் 122 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. நெதர்லாந்து எதிர்த்து வாக்களித்தது. சிங்கப்பூர் வாக்களிக்கவில்லை.
ஆனால், அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், சீனா, பிரான்ஸ், பிரிட்டன், வடகொரியா, பாகிஸ்தான் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. தொடக்கம் முதலே இந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறிய போது, “அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்பதே ஐ.நா.வின் லட்சியம். அதற்கு புதிய ஒப்பந்தம் வழிகோலும்.முதல் கட்டமாக 50 நாடுகளின் நாடாளுமன்றங்களில் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைக்கும் வரும்” என்றார்.