10 ஆயிரம் பேர் மீது வருமான வரி நடவடிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவில் முதலீடு செய்து இருந்தும், வருமான வரி செலுத்தாமலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமலும் இருக்கும், 10 ஆயிரம் பேரின் தகவல்களை திரட்டி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலுக்கு வந்த பிறகு கறுப்பு பண பதுக்கல்காரர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனினும் உழைக்கும் மக்களில் 3 சதவீத பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். 2015 – 16 நிதியாண்டில், 3.7 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து இருந்தனர்.
இதில் 99 லட்சம் பேர் தங்களின் ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழே தான் உள்ளது என குறிப்பிட்டு இருந்தனர். 1.72 லட்சம் பேர் மட்டுமே ஆண்டு வருமானம், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது என குறிப்பிட்டு இருந்தனர். அதே நேரத்தில், நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில், 1.25 கோடி கார்கள் விற்பனையாகி உள்ளன. 2015ம் ஆண்டில் மட்டும், இரண்டு கோடி பேர் வெளிநாடுக்கு சென்று வந்துள்ளனர்.
இதன் மூலம் பலர் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணியில், நிதி புலனாய்வு பிரிவு ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கியவர்கள், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பரஸ்பர முதலீட்டில் பணம் போட்டவர்கள், கார் வாங்கியவர்கள் என 10 ஆயிரம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்படி, எஸ்.எம்.எஸ். அனுப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. அதையும் மீறி அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், அடுத்தகட்டமாக சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *