காருண்யா பல்கலைக்கழக விழாவில் 1886 பேருக்கு பட்டம்
கோவையில் உள்ள, காருண்யா பல்கலைக்கழக 16 வது பட்டமளிப்பு விழா, டிஜிஎஸ் தினகரன் அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, பல்கலைக்கழக வேந்தர் பால்தினகரன் தலைமை தாங்கினார். ஸ்டெல்லா தினகரன் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் (பொ) ஜேம்ஸ் வரவேற்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து, வேந்தர் பால் தினகரன், பி.டெக், எம்.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., எம்.ஏ., எம்.பில், மற்றும் முனைவர் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 1886 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி, எல்லா நலமும், வளமும் பெற்று இறைவனின் ஆசியோடு வாழ பிரார்த்தனை செய்தார்.
தடைகளை தகர்க்க…
விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கலந்து கொண்டு பேசியதாவது:-–
இந்த உலகம், உங்களுக்கு நன்கு அறிமுகமானது என்றாலும், சவால்களை எதிர்கொள்ள நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொண்டால், அவற்றை எதிர் கொள்வது எளிது. கடின உழைப்பு மூலமாக, உங்கள் முன் உள்ள தடைகளை சுலபமாக தகர்த்து விட முடியும்.
தடைகளைக் கண்டு துவண்டு விடக் கூடாது. தடை என்றாலும், அதில் உள்ள வாய்ப்புக்கள் என்னென்ன? என்று அடையாளம் காண்பவர்களால் மட்டுமே, வாழ்வில் வெற்றி பெற முடியும். இதனால், எத்தகைய சவால் என்றாலும், தடை என்றாலும், அதை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது கற்றல் அனுபவமாகும். உலகம் ஏதாவது ஒன்றை உங்களுக்கு கற்பித்துக் கொண்டே இருக்கும்.
நாள்தோறும் புதிய புதிய வாய்ப்புகள் உருவாகி வருகிறது. புதிய தொழில் நுட்பங்களை, இளைய தலைமுறையினர் விரைவாக கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாய்ப்புகளை உருவாக்கி கொள்வதுடன், அதிகரித்து வரும் போட்டிகளையும் சமாளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
102 பேருக்கு சான்றிதழ்கள்
முன்னதாக, துறைவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 102 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. முதுகலை பொறியியல் துறையில் (எம்டெக்) சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏஞ்சலின் ராஜாத்திக்கும், இளங்களை பொறியியல் (பிடெக்) துறையில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுசிகா செல்வ நாயகிக்கும் பல்கலைக்கழக வேந்தர் விருதுகள் வழங்கப்பட்டன.
பட்டம் பெற்ற மாணவ மாணவியர், சீஷா தொண்டு நிறுவனம் மூலம், தங்களின் சமுதாய பற்றினை பறை சாற்றும் வண்ணம் மாற்றுத்திறனாளிகளுக்கு, 5 ஸ்கூட்டர்கள், 5 மூளை முடக்குவாத இருக்கைகள், 5 சக்கர நாற்காலிகள், 5 மூன்று சக்கர சைக்கிளகள் மற்றும் பல உபகரணங்களை வழங்கினார்.
விழாவில், இவாஞ்சலின் பால் தினகரன், காருண்யா பல்கலைக்கழக அறங்காவலர் ஜெயக்குமார் டேனியல், தலைமை நிர்வாக அதிகாரி எம்ஜே சேவியர், துணைவேந்தர் (பொ) இ.ஜே.ஜேம்ஸ், இணைவேந்தர் ரெட்ரலின் மார்கரேட், பதிவாளர் எலைஜா பிளசிங், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஹெப்சிபா கிறிஸ்டினாள், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெபசிங் மற்றும் பேராசிரியர்கள், மாணவ – மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.