கோவை நவீன வேளாண் கருவி அறிமுகம்
கோவை சம்யக் நிறுவனத்தின், ‘சம்யக் சூப்பர் பவர் டில்லர்’ என்ற உழவு யந்திரத்தின் அறிமுக விழா, கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி கலந்து கொண்டு, புதிய விவசாய வாகனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, வேளாண் பல்கலைக்கழகத்தின் டீன் திவாகர் துரைாஜ், ஆந்திரா அனந்தபூர் தென் மண்டல வேளாண் இயந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனத்தின் இயக்குனர் பி.பி.ராவ், சுகுணா குழுமத்தின் தலைவர் சவுந்தரராஜன், கொடிசியா தலைவர் சுந்தரம், விவசாய துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
நேர்த்தி, துல்லியம்
விழாவில், புதிய உழவு இயந்திரம் குறித்து, சம்யக் நிறுவன முதன்மை செயல் அதிகாரி செந்தில் குமார் பேசியதாவது:–
‘சம்யக்’ என்ற சொல், நேர்த்தி, துல்லியமானது என்று பொருள். இதற்கேற்றார்போல், விவசாயிகளுக்கு தேவையான கருவிகளை, தரமானதாகவும், குறைந்த விலையில் வழங்கும் வகையிலும், பல கருவிகளை தயாரிப்பதையே, முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம்.
‘சிறந்த உழவு யந்திரம்’
இந்த உழவு யந்திரம் 100% இந்தியா பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த யந்திரத்திற்கு, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பண்ணை யந்திர ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ‘சிறந்த உழவு யந்திரம்’ என்று சான்றிதழ் வழங்கி உள்ளது.
அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட, பல மத்திய, மாநில அரசின் துறைகளில், பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற்றுள்ளோம்.
இது 12 எச்பி இன்ஜினில் டீசலில் இயங்கக்கூடிய பிரத்யேக வாகனமாகும். இந்த இன்ஜினின் அமைப்பானது, வெப்பத்தை அதிகரிக்காமல், குளிர்ச்சியுடன் இருக்கும். இதில், முன்பக்கம் செல்ல 6 கியர்களும், பின்புறம் செல்ல 2 கியர்களும் உள்ளன. குறைந்தபட்சமாக, 1 லிட்டர் டீசலில், 1 மணிநேரம் வேலை செய்ய இயலும்.
நெல் வயல், சேத்து உழவு செய்தலே, இதன் பிரதான பயனாகும். அதுமட்டுமல்லாது, வயல் உழவு, தென்னை மரம் சுற்றி குழி எடுத்தல், டிரேக்டர் போல் ஒரு இடத்தில் உள்ள பொருட்களை, மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வடிவமைத்து உள்ளோம். மேலும், இந்த இயந்திரத்தில் உயர் அழுத்த குழாய் இணைத்து, மா, தென்னை உள்ளிட்ட பல்வேறு மரம் மற்றும் செடிகளுக்கு உரம் தெளிப்பானாகவும் உபயோகிக்கலாம்.
ரூ. 75ஆயிரம் மானியம்
சம்யக் இயந்திரத்தினை வாங்க பொது விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரமும், பெண்கள், சிறு, குறு விவசாயிகளுக்கு, ரூ.75 ஆயிரமும் அரசு மானியம் பெற முடியும்.
இந்திய விவசாய முறையில் ஒரு புரட்சியை கொண்டு வர வருங்காலத்தில் இதுபோல் பல விவசாய பொருட்கள், இயந்திரங்கள், வாகனங்கள் தயாரிக்க திட்டமிட்டு, பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து, ஆந்திரா அனந்தபூர் தென் மண்டல வேளாண் இயந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனத்தின் இயக்குனர் பி.பி.ராவ், விநியோகஸ்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில், உழவர் சங்க தலைவர் தங்கராஜ், செயல் இயக்குநர் ஸ்ரீபதி, இயக்குநர்கள் அசோகா, அமுதா, விநியோகிஸ்தர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.