ஸ்ரீ சாய் கலாஷேத்ராவின் கின்னஸ் சாதனை

ஸ்ரீ சாய் கலாஷேத்ராவின் 13வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, 40 மாணவ மாணவிகள், கரோக்கி இசையுடன், பாடல்களையும், இசைக் கருவிகளையும், தொடர்ந்து 12 மணி நேரம் இடைவிடாமல் இசைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் ஸ்ரீ சாய் கலாஷேத்ராவின் 13வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கின்னஸ் சாதனை முயற்சியாக, மிக அதிக நேரம் தொடர்ந்து நிகழ்த்தப்படும் பல்வகை இசை பொழுது போக்கு நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் ஸ்ரீ லட்சுமி பேலஸில் இன்று துவங்கியது.

விழாவிற்கு, கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனரும், செந்தில் குரூப் நிறுவனங்களின் தலைவருமான ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். ஸ்ரீ சாய் கலாஷேத்ராவின் இசை ஆசிரியர் எஸ்.வி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வீணா பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். ஸ்ரீ லட்சுமி பேலஸ் பூரணி சுப்பிரமணியம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், தமிழ் திரை உலகின் பெண் இசையமைப்பாளர் ஜீவா வர்ஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர்.

இசை ஆர்வத்தை ஊக்குவியுங்கள்

விழாவில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசியதாவது:-

6 வயது குழந்தை முதல் 50 வயது பெரியவர் வரை, இந்த சாதனை நிகழ்ச்சியில், பங்கேற்பதை பாராட்டுகிறேன். எங்கள் காலத்தில், திரைப்பட பாடகராக வேண்டும் என்றால், பல முன்னணி பாடகர்களை தாண்டி, சிரமப்பட்டு தான் வர முடியும், அதே போல், இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்றால், பல முன்னணி இசை அமைப்பாளர்களிடம், பல ஆண்டுகள் வேலை செய்து, நன்கு கற்றுக் கொண்டு, பிறகுதான் இசையமைப்பாளர் ஆக முடியும்.

ஆனால், தற்போது அந்த நிலை இல்லை.

கீ போர்டு வாசிப்பவர்கள், தங்களது தனித்திறமையினால், இசை அமைப்பாளர் ஆகலாம். எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், டி.வி.கரிவரதராஜு சிறப்புரை ஆற்றினார். முன்னாள் போலீஸ் டிஎஸ்பி வெள்ளிங்கிரி, ரோட்டரி சங்கத்தலைவர் சுந்தரகணேஷ், துபாய் ராமலிங்கம், ராஜாமணி, என்.எஸ்.வி.ஆறுமுகம், ஜெ.ஆர்.ஜோசப் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கின்னஸ் சாதனை முயற்சி

சென்னை தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் ஆய்வு அதிகாரி ராஜ்கிருஷ்ணா மேற்பார்வையில், காலை 9.45 மணிக்கு, சாதனை நிகழ்ச்சி துவங்கியது.

இது குறித்து, ஸ்ரீசாய் கலாக்ஷேத்ரா நிறுவனர் எஸ்.வி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

கடந்த 2005 ஆம் ஆண்டு துவங்கிய, ஸ்ரீசாய் கலாஷேத்ரா, கலை சேவையில் ஆண்டுதோறும் 250 க்கும் அதிகமான இசைக்கலைஞர்களை உருவாக்கி வருகிறது. வாய்பாட்டு, சங்கீதம், கிடார், வீணை மற்றும் கீ போர்டு போன்ற இசைக் கருவிகளை, மாணவர்களுக்கு முறையாக கற்பித்து வருகிறோம்.

இந்த இசைக்கலைஞர்களை, உலக அளவிற்கு கொண்டு செல்லும் முயற்சியாக, 40 மாணவ மாணவிகள் இணைந்து, கரோக்கி இசையுடன், பாடல்களையும் இசைக் கருவிகளையும், தொடர்ந்து 12 மணி நேரம் இடைவிடாமல் வாசிக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க செயலாளர் விஜயகிரி, நிர்வாகிகள் எல்.எஸ்.சித்துராம், ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *