திருப்பூரில் வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பாளையம் ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா முன்னிலையில், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையேற்று சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, சிறப்பாக பணிபுரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு கேடயம் வழங்கி தெரிவிக்கையில்,
ஒவ்வொரு மனிதருக்கும், மருத்துவ பரிசோதனை என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும், வாகன ஓட்டுநர்களுக்கு, மருத்துவ பரிசோதனை மிக முக்கியமாகும். காரணம், ஆண்டுக்கு ஒருமுறை கண்பரிசோதனை செய்வது மிக அவசியமாகும். அப்பொழுது தான், கண்பார்வை சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்வதுடன், ஏதேனும் சிகிச்சை பெற வேண்டுமானால், ஆரம்பித்திலேயே கண்டறிவதன் மூலம், எளிதாக சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.
தற்பொழுது, செல்போன் பயன்பாட்டை வாகன ஓட்டுநர்கள் பணியின் போது பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றி வருவதால், உங்கள் வாகனம் அதி வேகமாக இயக்க அவசியம் இல்லை.
அவர்களை பெற்றோர்கள் பாதுகாத்திடுவது போல் நீங்கள் பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும். அதற்கு உங்கள் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். அதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இது போன்ற மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதில், ஒவ்வொருவருக்கும் முழு மருத்துவ பரிசோதனை, ரத்த பரிசோதனை, சக்கரைநோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை, போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தேவைப்பட்டால் உயர்சிகிச்சைக்காக தலைமை மருத்துவமனைக்கு, மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.
எனவே, மருத்துவ பரிசோதனை என்பது மிக அவசியம். அதிலும், 40 வயது கடந்து விட்டால், கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இன்றைக்கு நடை பெறுகின்ற மருத்துவ முகாமில், சுமார் 450 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டீர்கள்.
அதே போல், மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெறுகின்ற மருத்துவ முகாமில், வாகன ஓட்டுநர்கள் பரிசோதனை செய்து கொண்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட வேண்டும் என, கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், கண்காணிப்பாளர் நடராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன், ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்கள் தாளாளர் தங்கராஜ், வாகன ஆய்வாளர்கள் பாஸ்கரன், தங்கராஜ், மருத்துவர் கண்னண் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.