கள்ளியூரில் சுகாதார பணிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளம்பட்டி தரப்பு கள்ளியூர் கிராமத்தில், காய்ச்சல் நோய் தடுப்பு சுகாதாரப் பணிகளை, கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.
கள்ளியூர் கிராமத்தில், குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக, காய்ச்சல் பாதிப்பு உள்ளது குறித்து, தகவல் வந்ததையடுத்து, மருத்துவர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, காய்ச்சல் நோய் உள்ள வீடுகளுக்கு, நேரடியாக சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலவேம்பு குடிநீர்
குடிநீர் தொட்டிகளில் அபேட் சொல்யூசன் இடுதல், நீர் தேங்கும் இடங்களில், கொசு மருந்து தெளித்தல், கழிவு நீர் கால்வாய்கள் சுகாதரமாக பராமரிப்பது குறித்து, அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள, குடிநீர் தொட்டிகளில் லார்வா புழுக்கள் உருவாகாத வகையில், குடிநீர் தொட்டிகளை பராமரித்து, உரிய முறையில், மேல்மூடி அமைப்பதோடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கொசு ஒழிப்பு பணிகள்
குடிநீர் குழாய்கள் இணைக்கும் இடங்களில், தண்ணீர் தேங்காத வண்ணம், தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்றிட வேண்டும். கிராமங்களில் கால்நடைகள் இருக்கும் இடங்களை, சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். கிராமத்தில் அனைத்து இடங்களிலும், மாலை நேரத்தில், புகை தெளிப்பான் மூலம், கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, காய்ச்சல் பாதிப்பு குறித்து, உடனடியாக மருத்துவ குழுவிற்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு, நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓகேனக்கல் குடிநீர் வழங்க, தனியாக சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.
ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் அருண், வட்டாட்சியர் பண்டிரிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பையாஸ் அகமது மற்றும் சுகாதர பணியாளர்கள் உடன் இருந்தனர்.