எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் துறையின் மூலம், எரிவாயு விநியோகம் செய்யும் போது, நுகர்வோர்களின் குறைகளை களைவது தொடர்பாக, எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கலெக்டர் தெரிவித்தாவது:–-
நுகர்வோர்கள், சமையல் எரிவாயு பயன்படுத்தும் போது, பாதுகாப்பு காரணிகள் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். எரிவாயு உருளையின், எடை மற்றும் அதில் எரிவாயு கசிவு இல்லாமல் இருப்பதை பரிசோதிக்க வேண்டும்.
கிராமப்புறங்களில், எரிவாயு உருளைகள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல், ஒரு பொதுவான இடத்தில் வைத்து, விநியோகிக்கப்படுவதால், வீட்டு உபயோக எரிவாயு உருளைகள், முறைகேடாக பயன்படுத்துகிறார்கள்.
அடையாள அட்டை கட்டாயம்
நகர்ப்புறங்களில் உணவு விடுதிகள் மற்றும் அடுமனைகளில் எரிவாயு உருளைகள் முறைகேடாக பயன்படுத்துவதை கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென, எண்ணெய் நிறுவனங்களுக்கும், எரிவாயு முகவர்களுக்கும் அறிவுறுத்துகிறேன். மேலும், எரிவாயு விநியோகம் செய்யும் போது, டெலிவரிபாய், எரிவாயு உருளையின் மதிப்பிற்கு மேல், தொகை வசூலிக்கக்கூடாது. டெலிவரி பாய் அனைவரும், அடையாள அட்டை அணிய வேண்டும்.
ஆதார் அட்டை, வங்கிக் கணக்குடன் இணைக்கப் பட்டிருப்பதால், ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு மானியம், வெவ்வேறு கணக்குகளில் சேர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகாருக்கு, சமீபத்தில் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில், மானியம் சேர்க்கப்பட வேண்டும்.
எரிவாயு உருளை வாங்கும்போது, கேஸ் அடுப்பு, மிக்ஸி போன்ற பொருள்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என, நுகர்வோர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகாருக்கு, அதனை சரி செய்து கொள்ள வேண்டும். பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு, மத்திய அரசின் விதிமுறைகளின்படி எரிவாயு உருளை விநியோகம் செய்யவேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன், நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.