தானிய மூட்டைகளில் பூச்சிகளை கண்டறியும் ‘பொறி’
கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் உருவாக்கிய, தானிய சேமிப்பு மூட்டைகளில், பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பொறிக்கு, இந்திய காப்புரிமை அளிக்கப்பட்டு உள்ளது.
தானியங்களை சேமிக்கும் போது பூச்சிகளின் தாக்குதலால் குறிப்பிடத்தக்க அளவு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு சராசரியாக 5% முதல் 10% வரை ஏற்படுகிறது. வயலிலிருந்து, பூச்சி தாக்குதலுக்கு உள்ளான, தானியங்களை சேமிப்பிற்கு எடுத்துச் செல்லுவதே, சேமிப்பின்போது ஏற்படும் சேதத்திற்கு முக்கிய காரணம்.
எனவே, அறுவடை செய்யப்பட்ட தானியங்கள், முட்டை, புழு அல்லது கூட்டுப்புழு போன்ற ஏதேனும் ஒரு சில பூச்சி பருவ நிலைகளை கொண்டிருக்கும். தானியங்களை சேமிக்க ஆரம்பித்த, 20 முதல் 25 நாட்களில், இந்த பூச்சி பருவங்களிலிருந்து, வளர்ந்த வண்டுகள் வெளியே வரும்.
பூச்சிகளை கண்காணிக்க…
சேமிப்பு கிடங்குகளில், சேமிப்பு தானிய பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகப் பூச்சியியல் துறை பேராசிரியர் மோகன் ஓர் எளிய பொறியை கண்டுபிடித்துள்ளார். இதற்கு, இந்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
கோணிப்பைகள் கொண்டு தானியங்களை சேமிக்கும் முறை, இந்திய தானிய சேமிப்பு கழகங்களால் கையாளப்பட்டு வருகிறது. இந்த முறையில், பூச்சியை கண்டறிய கோணி ஊசி (குத்தூசி) பயன்படுத்தபட்டு வருகிறது.
இம்முறையால் கோணிப்பைகளுக்கு சேதம் உண்டாகிறது. மேலும், குறைந்த அளவே தானிய மூட்டைகளில் பூச்சிகள் இருக்கும் போது, அவைகளை கண்டறிய இம்முறை பெரும்பாலான நேரங்களில் பயன்தருவதாக இல்லை. எனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஓர் புதிய பொறியை கண்டுபிடித்துள்ளது.
பொறியின் சிறப்பு அம்சங்கள்
வேளாண் பல்கலைக்கழகம் கண்டறிந்து உள்ள இந்த பொறியை, சுலபமாக மூட்டைகளின் இடுக்குகளில், அதிக தூரம் உள்ளடக்கி வைக்க முடியும்.
பூச்சிகள், பொறியில் உள்ள துவாரங்களில் நுழைந்து, பொறியின் அடிபாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கூம்பு வடிவ மூடியில் அகப்பட்டுக்கொள்கின்றன.
இப்பொறியால், கோணிப்பைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது. அடுக்கப்பட்ட மூட்டைகளின் எந்த பகுதியிலும் (மேல், கீழ், ஓரப்பகுதி) பொறியை பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை அறியலாம். பொறியில் எந்த விதமான இனகவர்ச்சி, உணவு பொருள்கள் பயன் படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியின் விலை ரூ.450
நெல், மிளகாய் மற்றும் கோதுமையை தாக்கும் பூச்சிகளை பிடிக்க இப்பொறி உதவுகிறது. இப்பொறியை, கிடங்குகளில், மூட்டைகளுக்கு இடையில் வைத்து, ஒரு வாரம் சென்று கண்காணிக்க வேண்டும்.
அரிசி வண்டு, பயறு வண்டு, சிவப்பு மாவு வண்டு, அரம் போல் அமைப்பு கொண்ட வண்டு, சிகரெட் வண்டு மற்றும் நெல் துளைக்கும் வண்டு ஆகிய பூச்சிகளை கண்டறிய, இந்த உபகாரணம் மிகவும் பயன்படும்.
மூட்டைகளில் சேமிக்கும் தானியங்களை தாக்கும் பூச்சிகளை கண்டறிய, இந்த அறிய உபகரணத்தை, தமிழ்நாடு வேளாளண்மை பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ளது.
வெவ்வேறு உணவுப் பொருட்களை தாக்கும் பூச்சிகளை கண்டறிய உதவுவது மட்டுமின்றி, முக்கியமாக நெல், மிளகாய் மற்றும் கோதுமைக்கு இது மிகவும் பயன்படும். பிளாஸ்டிக் பொறி ஒன்றின் விலை ரூ.450 ஆகும்.