மருதங்குடி கிராமத்தில் இரட்டை குவளை முறை இல்லை: தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தகவல்
மதுரை மாவட்டம், மருதங்குடி கிராமத்தில் இரட்டை குவளை முறை புகார் குறித்து தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையில் அத்தகைய நடைமுறை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆய்வுக்கூட்டம் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தலைமையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரெண்டு மணிவண்ணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் என்.மணிவண்ணன், ஆணைய இயக்குநர் எம்.மதியழகன், விசாரணை அலுவலர்கள் ஏ.இனியன், எஸ்.லிஸ்டர், மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியலமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள், தாழ்த்தப்பட்டடோர்க்கான திட்டங்கள், இட ஒதுக்கீடு, பதவி உயர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் மருதங்குடி கிராமத்தில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாக தகவல் வெளியானது. அவ்வாறு இல்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிக்கை தரப்பட்டுள்ளது. இருப்பினும் அக்கிராமத்தில் நேரில் ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினார். இதையடுத்து இரட்டை குவளை முறை புகார் தெரிவிக்கப்பட்ட மருதங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் ஆய்வு செய்தனர். அங்கு விசாரணை நடத்தியதில் அத்தகைய நடைமுறை இல்லை என்பது தெரிய வந்தது.