ஸ்கேட்டிங், ஓவியம், சைக்கிளிங், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் மதுரை வருமான வரி அலுவலகம் அருகே ‘சந்தோஷ சாலை’ நிகழ்ச்சி
மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த வருமான வரி அலுவலக சாலையில் இன்று காலை 3 மணி நேரத்திற்கு போக்குவரத்தை நிறுத்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடிய “ஹேப்பி ஸ்ட்ரீட்” என்கிற சந்தோஷ சாலை நடைபெற்றது .
மதுரை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்களால் நேசிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் அவரவர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சுதந்திரமாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பயன்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி சார்பில் ஹேப்பி ஸ்டிரிட் என்கிற சந்தோஷ சாலை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து மதுரை மாநகராட்சியின் சார்பில் மூன்றாவது முறையாக ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி வருமான வரி அலுவலக சாலையில் பீ.பீ.குளம் சந்திப்பு முதல் உழவர்சந்தை வரை கமிஷனர் அனீஷ் சேகர் தலைமையில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
வருமான வரி அலுவலகம் பீ.பீ.குளம் சந்திப்பு முதல் உழவர் சந்தை வரை சாலையின் இருபுறங்களிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் விளையாடினார்கள்.
ஸ்கேட்டிங், ஓவியம், சைக்கிளிங், ஜம்பிங் பால், ஸ்கிப்பிங், பேஸ்கட்பால், புட்பால், ஷெட்டில், ரோப் புல்லிங், கேரம்போர்டு, வாலிபால், ஸ்கூட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களும் டான்ஸ், பிட்நெஸ் டான்ஸ், யோகா, சிலம்பாட்டம், லைவ்பேண்டு, கேம்ஸ்ஷோ உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுடன் பெற்றோர்களும், சிறுவர்களும் நடத்தினார்கள்.
அரங்குகள்
மேலும் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு முறைகள், இயற்கை உணவுகள் உள்ளிட்ட தற்காலிக அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை கமிஷனர் ப.மணிவண்ணன், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், உதவி நகர்நல அலுவலர் மரு.பார்த்திப்பன், உதவி கமிஷனர் செல்லப்பா, பழனிச்சாமி, தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் சிவசுப்பிர மணியன், சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, செல்வகுமார், ராமசுப்பிரமணியன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேலாளர்கள், எலிகண்ட் ஈவன்ஸ் நிறுவனத்தை சார்ந்த ஜீவன் உள்ளிட்ட உறுப்பினர்கள், பங்களிப்பாளர்கள், விளம்பரதாரர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.