நாட்டின் வளர்ச்சிக்காகவே ஜி.எஸ்.டி. அறிமுகம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
நாட்டின் வளர்ச்சிக்காகவே ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மதுரையில் மடீட்சியா அரங்கில் ஜி.எஸ்.டி தொடர்பான விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மடீட்சியா தலைவர் முராரி வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கலந்துகொண்டு ஜி.எஸ்.டி வரி தொடர்பாக தொழிலதிபர்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசினார். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :-
இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி சட்டம் தொடர்பாக ஒவ்வொரு அமைச்சரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களிடம் ஜி.எஸ்.டி. தொடர்பான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நாங்கள் ஜி.எஸ்.டி தொடர்பான விளக்கங்களை அளித்து வருகிறோம். பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் ஏகப்பட்ட சந்தேகங்களும் முரண்பாடுகளும் இருக்கிறது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்காகவே ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வருவதற்கு முன்பாக வரிகளை வசூலிக்கும் அதிகாரம் மத்திய மாநில அரசுகளிடம் இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி குழுவிடம் இருக்கிறது. இந்த ஜி.எஸ்.டி குழுவில் நமது நாட்டின் 29 மாநிலங்களில் உள்ள மாநில நிதி அமைச்சர்கள் தான் இருக்கிறார்கள். எனவே, வர்த்தகர்கள் தங்களுடைய சந்தேகங்களை கோரிக்கைகளை அவர்களிடம் கேட்டு தெளிவுப் பெறலாம். மேலும் இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா போன்ற மாநிலங்கள் உற்பத்தி துறையில் முன்னணியில் சிறந்து விளங்குகிறது. எனவே இவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் நஷ்ட ஈடு அதிகமாக இருப்பதாக கோரிக்கைகள் எழுகிறது. எனவே, இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இட்லி மாவு, ஹாலோபிரிக்ஸ், அகர்பத்தி, சாம்ராணி, தீப்பெட்டி போன்ற பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரிவிதிப்பை முறைப்படுத்த டெல்லியில் ஆலோசனை நடத்தப்படும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கடலை மிட்டாய்க்கு அதிகமான வரியும் பீட்சாவிற்கு குறைவான வரி விதிக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கினார். அதாவது கடலை மிட்டாய் தயார் செய்து அதிக நாள் இருக்கும் உணவுப்பொருள் என்பதால் அதற்கு 12 சதவீதமும், பீட்சா உடனடியாக தயார் செய்து சாப்பிடும் நிலையில் உள்ள பீட்சாவிற்கு 18 சதவீதமும் பீட்சா தயாரிப்பதற்கான பிரெட்க்கு மட்டுமே 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கி கூறினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் மடீட்சியா தலைவர் ஞானசம்பந்தன், இண்டியன் பேக்கர்ஸ் செயலாளர் அன்புராஜன், தென் தமிழ்நாடு சைனடரிவேர்ஸ் மற்றும் டைல்ஸ் அசோசியேஷன் முன்னாள் தலைவர் குமரகுரு, சிவகாசி மாஸ்டர் பிரிண்டர்ஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் சங்கரபாண்டியன், கான்கிரீட் பேவர்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கண்ணதாசன், மதுரை புத்தக நுகர்வோர்கள் உதவி செயலாளர் ஸ்ரீனிவாசன், ரைஸ்மில்லர் சங்கங்களின் செயலாளர் ராஜேந்திரன், பட்டய கணக்காளர் சுந்தரம், பேராசிரியர் சாஸ்ட்ரா பல்கலைக்கழகம் ஸ்ரீனிவாசன், மத்திய சுங்கவரித்துறை கமிஷனர் சரவணகுமார் மற்றும் தொழிலதிபர்கள், சிறுகுறுந்தொழில் வணிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக மடீட்சியாவின் தலைமை செயலாளர் முருகன் நன்றி கூறினார்.