பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்கு கீழ் கொண்டு வராதது ஏன்?- வெங்கய்ய நாயுடு விளக்கம்
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வராதது குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விளக்கமளித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
எந்த ஒரு மாற்றம் வந்தாலும் அதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். முறையாக வரி கட்டுபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி-யால் பாதிப்பு இருக்காது. முறை யாக வரி கட்டாதவர்கள்தான் பாதிக்கப் படுவார்கள்.
ஜிஎஸ்டி-யால் வருவாய் அதிகரிப்ப தோடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (ஜிடிபி) அதிகரிக்கும். ஜிஎஸ்டி-யால் வணிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் மக்களிடம் வரியை வசூலித்து அரசிடம் அளிக்க உள்ளனர்.
ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து கட்சித் தலைவர் களிடமும் ஆலோசனை நடத்தினோம். அதேபோன்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் ஆலோசனை நடத்தியபோது, “தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி-யால் தொடக்கத்தில் பயன் இருக்காது. தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு தொடக்கத்தில் வருவாய் இழப்பு இருக்கும். எனவே, தமிழகத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும்” என்று தெரிவித்தேன். அதற்கு அவர், ‘ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிமுக குறுக்கே நிற்காது’ என்று தெரிவித்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதற்காகத்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அவ்வப்போது நடைபெற உள்ளது. கடந்த 1947-ம் ஆண்டு நாட்டின் ஒருங்கிணைப்பு நடந்தது. தற்போது 70 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதார ரீதீயாக ஒருங்கிணைப்பு நடந்துள்ளது.
பெட்ரோல், டீசல் ஏன் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் வரவில்லை என்று கேட்கின்றனர். ஜிஎஸ்டி-ஐ அமல்படுத்து வதற்காக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கடந்த 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், ‘பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும், எனவே, அவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பு இருந்தால்தான் எந்த ஒரு வரி விதிப்பையும் அமல்படுத்த முடியும். மத்திய அரசு மட்டுமே இதில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படிச் செய்தால் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறுவார்கள்.
மத்திய அமைச்சர்கள் தமிழக முதல்வரை சந்திப்பது குறித்து சிலர் விமர்சிக்கின்றனர். தமிழக மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. எனவேதான், தமிழக முதல்வரை சந்திக்கிறோம். கர்நாடகா, கேரளா என்று எந்த மாநிலத்திலும் யார் முதல்வராக இருந்தாலும் அவர்களை சந்திக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
மேலும், எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்கவில்லை. அது அரசின் கொள்கையும் இல்லை. அவரவர் தங் கள் தாய்மொழியில் முதலில் சிறந்து விளங்க வேண்டும். அதன்பிறகு, யார் எந்த மொழி வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கற்றுக்கொள்ள லாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஜிஎஸ்டி (தமிழ்நாடு) முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
‘ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிக்காது’
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்யாது. சட்டப்பிரிவு 356-ஐ எக்காலத்திலும் பயன்படுத்த மாட்டோம். புதுச்சேரி முதல்வர் – ஆளுநர் இடையேயான கருத்துவேறுபாட்டை அவர்கள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.