சந்திரயான்-2 விரைவில் சந்திரனில் ஆய்வு செய்யும்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
சந்திரயான் 2 அடுத்த ஆண்டு சந்திரனில் ஆய்வு செய்ய உள்ளதாக இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
திருச்செங்கோடு தனியார் பொறியியல் கல்லூரியில் நடை பெற்ற பட்டமளிப்பு விழாவில் பெங்களூரு இஸ்ரோ மைய இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய மக்களுக்கு பயன்படும் வகையில் விண்வெளி ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொலைத்தொடர்பு, விவசாயம், மீனவர்களுக்கு பயன், பருவநிலை ஆய்வு உள்ளிட்டவற்றை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணி நடந்துவருகிறது.
இணையதள வசதி
செல்போன் டவர் இல்லாத இடத்திலும் இணையதள வசதி கிடைக்க ஆய்வு செய்யப்படுகிறது. ஊராட்சி முதல் மத்திய அரசு வரை இணைந்து செயல்படுத்த முயற்சி நடந்துவருகிறது.
இதுவரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இந்தியா இணையவில்லை. சந்திரனில் நிரந்தர ஆய்வு மையம் அமைந்தால் அதில் இந்தியா இணைந்து பணியாற்றும். சந்திரயான்-2, 2018-ம் ஆண்டு சந்திரனில் ஆய்வு செய்யும். இது 6 சக்கர வாகனத்துடன் அனுப்பப்பட உள்ளது.
வாரம் ஒரு செயற்கைக்கோள்
மாதம் ஒரு செயற்கைக்கோள் என்ற நிலை மாறி வாரம் ஒன்று என்ற அளவில் விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புகிறோம். சூரியனையும், புதனையும் ஆய்வு செய்ய முதல் கட்டப் பணி நடந்து வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கும், நிலவுக்கும் மனிதர்களை அனுப்ப சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம் என்றார்.