காவிரி மேலாண்மை வாரிய வழக்கில் வெற்றிபெறுவோம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
நாளை விசாரணைக்கு வரும் காவிரி மேலாண்மை வாரிய வழக்கில் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் அகில இந்திய கபடி போட்டி திருச்சி சிவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா உள்பட 29 மாநிலங்களில் இருந்து 1,200 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மொத்தம் 58 அணிகள் பங்கேற்றன. நேற்று மாலை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.
இதனை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். ஆர்.சிவபதி தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் பட்டிதொட்டி எல்லாம் விளையாடப்படும் ஒரு விளையாட்டு என்றால் அது கபடி தான். ஒரு சிறிய மைதானம் இருந்தால் போதும், எளிமையான இந்த விளையாட்டை விளையாடி விடலாம். கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆயத்தமாகும் இளைஞர்கள், கபடியை முன்னோட்டமாக விளையாடுவார்கள். உடல் வலிமையோடு இருந்தால் தான் கபடியை சிறப்பாக விளையாட முடியும்.
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கபடிக்காக பல சிறப்புகளை செய்து இருக்கிறார். 1996-ம் ஆண்டு கபடி விளையாட்டு மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கினார். ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஜெயலலிதா பரிசுகளை வழங்கினார்.
ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற சதீஷ் என்ற வீரருக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் பரிசு வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கம் வென்றார். அவருக்கு ரூ.2 கோடி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சர்வதேச தரத்திலான ஆக்கி மைதானம் அமைத்தார். திருச்சியில் செயற்கை இழை ஓடுதளம் ரூ.6 கோடியில் அமைக்க உத்தரவிட்டு, அந்த பணிகள் நடைபெற்று உள்ளன. திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா.
திருச்சியில் தேசிய சட்டப்பள்ளி, தொழிற்சாலைகள், பாலங்களை தந்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஜெயலலிதா கனவு கண்டார். அந்த கனவு இந்த விழாவின் மூலம் நனவாகி கொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆணையை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதிபோட்டியில் ஆண்கள் பிரிவில் வென்ற அரியானா அணிக்கும், பெண்கள் பிரிவில் வென்ற இமாச்சலபிரதேச அணிக்கும் எம். ஜி.ஆர். இளைஞர் அணி சுழற்கோப்பையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
போட்டியில் ஆண்கள், பெண்கள் என ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெற்ற அணிகளுக்கு தலா ரூ.3 லட்சமும், 2-ம் இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.2 லட்சமும், 3-ம் இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.1 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, டாக்டர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. காவல்துறையில் 13,127 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதற்காக சட்டப்போராட்டம் நடத்தி வந்தார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கு நாளை 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று விசாரணைக்கு வர உள்ளது. இதில் வாதாடி வெற்றி பெறுவோம். விவசாயிகளுக்கு தேவையான நீரை பெற்றுத் தருவோம் என்றார்.