வங்கக்கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டுப்பயிற்சி : அதிர்ச்சியில் சீனா

இந்திய கடற்படையை வலிமைப்படுத்துவதற்காகவும், எதிரி நாடுகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், திடீரென போர் மூண்டால் எதிரி நாடுகளின் வியூகத்தை கணித்து செயல்படவும் ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தியா, அமெரிக்கா கடற்படைகள் இணைந்து, கடந்த 1992ம் ஆண்டு முதல் மலபார் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த கூட்டுப் பயிற்சியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜப்பான் கடற்படையும் இணைந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 7ம் தேதி முதல் வங்கக்கடல் பகுதியில், இந்தியா – அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து மலபார் 2017 என்ற பெயரிலான கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 17ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 2 போர்க்கப்பல்கள், சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. அவற்றுக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடல் மற்றும் துறைமுகம் ஆகிய 2 பகுதிகளிலும் நடைபெறும் கூட்டுப்பயிற்சியில், வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது, நீர்மூழ்கிக் கப்பல்களை தடுப்பது, கடலில் மூழ்குவோரை தேடுவது மற்றும் மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் நாடுகளால், கடல்வழி அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்தியா உள்பட 3 சக்தி வாய்ந்த நாடுகளின் கூட்டுப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது சீனாவிற்கு பேரதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *