ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம்: முதல்வர் எடப்பாடி உறுதி

‘‘ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி கூறினார்.
தமிழக விவசாயிகளுக்கு தேவையான காவிரி நீரை உச்சநீதிமன்றம் மூலம் பெற்றுத் தருவோம் என்றும் முதலமைச்சர் கூறினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று திருச்சியில் அகில இந்திய கபடி போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அண்ணா தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு டி.டி.வி.தினகரனை ஏன் அழைக்கவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு, இதுபற்றி அவரே ஏற்கனவே தெளிவாக கூறி இருக்கிறார் என்றார்.
தமிழகத்திற்கு வரக்கூடிய பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு கூட ஒரு பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது என்றார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதே? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு முதலமைச்சர் எடப்பாடி கூறுகையில், ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றும். ஒரு சில இடங்களில் நீதிமன்ற வழக்கு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம்.ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
காவிரியில் கர்நாடக அரசு கூடுதலாக தண்ணீர் திறந்து விடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பீர்களா? என்று கேட்டதற்கு, இதற்காக இப்போது சந்திக்க செல்லவில்லை. ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது இதுபற்றி வலியுறுத்தி கூறி இருக்கிறேன். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது காவிரி நீர் பிரச்சினையில் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி அதை அரசிதழில் வெளியிட வைத்தார். ஆனால் காவிரி நீர் பிரச்சினைக்காக காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்று குழுவும் இன்னும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு 11-ந்தேதி(நாளை) அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. நிச்சயமாக இவ்வழக்கில் வாதாடி பெற்று தமிழக விவசாயிகளுக்கு தேவையான காவிரி நீரை பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்தார்.
காவல்துறையில் நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளதே? என கேட்டதற்கு, 2-ம் நிலை காவலர்கள் 13 ஆயிரத்து 200 பேரை நியமிப்பதற்கான எழுத்து தேர்வு முடிந்து உள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் சில காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *