தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: ஓ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழக மீனவர்கள் பாரம்பரியம், பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கடற்பகுதிகளில் கூட மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை இடையூறு செய்து கொண்டிருக்கிறது. கைது செய்வதும், சிறைபிடிப்பதும், சித்திரவதை செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும் வலைகளை அறுத்தெறியும் அராஜகங்களும் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இலங்கைக் கடற்படையினரின் இரக்கமற்ற செயல்களால் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான தமிழக மீனவர்களின் குடும்பங்கள் இன்னமும் மீளமுடியாத துயரத்தில் இருக்கிறது.
இந்தத் துயரங்கள் எல்லாம் தீருவதற்கு முன்பு, நமது பாரம்பரியமான பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு 50 ஆயிரம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் என்ற புதிய மசோதாவை இலங்கை அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தமிழக மீனவர்களின் படகுகளின் தன்மையைப் பொறுத்து இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை அபராதம் விதிப்பதற்கான சட்டம் இயற்ற ஏற்பாடு செய்து செய்துகொண்டிருக்கிறது.
இதையெல்லாம் தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் ஏற்படுத்திக் கொடுங்கள் என்று நாம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் போதே இலங்கை அரசு அதைப்பற்றியேல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமலும் ஈவு, இரக்கமில்லாமலும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
பொய்யான குற்றச்சாட்டு
இன்று, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. இலங்கை கடற்படையினர் தாங்கள் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
மத்திய அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தமிழக மீனவர்களுக்கு பாரம்பரியப் பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை காப்பாற்றித்தர வேண்டும்.
தமிழக அரசு அறிக்கைகள் விடுவதும், பாரதப் பிரதமருக்கு கடிதங்கள் எழுதுவதும் தான் தங்கள் கடமையென்று நினைப்போடு நிறுத்திவிடாமல் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விடுதலைக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் எப்படி நிம்மதியும், மகிழ்ச்சியும் இருந்ததோ அந்தச் சூழ்நிலையை உருவாக்கி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *