செய்யாறு வினாயகபுரத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை

 

செய்யாறு வினாயகபுரத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தினபோது, விக்கரவாண்டி ராதாமணி கேள்வி எழுப்பினார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் – அனந்தபுரம் நெஞ்சாலையில் கடையம் – நல்லாபளையம் வரை வனத்துறையின் அனுமதியுடன் சாலை அமைக்க அரசு முன் வருமா? என்று கேட்டார்.
அதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளிக்கையில், கண்டாச்சிபுரம் – அனந்தபுரம் நெஞ்சாலையில் கடையம் – நல்லாபளையம் வரை அமைய உள்ள புதிய சாலை உடையா நத்தம் காப்புகாட்டினுள் செல்கிறது. இதற்கு தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 16ன் கீழ் வழி உரிமம் வழங்கப்படவில்லை. இச்சாலை அமைக்க வேண்டுமாயின், உடையா நத்தம் காப்பு காட்டில் வன நிலம் தேவைப்படும். வன நோக்கமற்ற பிற பணிகளுக்கு, வன நிலத்தை வழங்க நடப்பில் உள்ள வன பாதுகாப்பு சட்டம் 1980 பிரிவு 2ன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்து, மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இது தொடர்பான குறிப்புகள் சம்பந்தப்பட்ட பயனீட்டாளர் துறையிடமிருந்து, பெறப்படின் வன நிலம் ஒதுக்குவது குறித்து, மத்திய அரசின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஜெயலலிதா அரசு 65 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.175 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வன நிலங்களில் சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோரிக்கைகளை அனைத்து தரப்பு உறுப்பினர்களும் தெரிவித்து வருகிறார்கள். கட்சி வேறுபாடின்றி, உறுப்பினர்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வனப்பகுதிகளில் சாலை போன்ற பணிகள் அமைப்பதற்கு, சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். எவ்வளவு நிதி தேவையோ அதை பெற்று உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
தூசி மோகன் கேள்வி
அதை தொடர்ந்து செய்யார் உறுப்பினர் தூசி மோகன் கேள்வி எழுப்பினார். செய்யார் தொகுதி தென் தண்டலம் ஊராட்சி வினாயகபுரம் கிராமத்தில் பகுதி நேர கிராம விலைக் கடை அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்து கூறியதாவது:–
தென் தண்டலம் ஊராட்சி ஒன்றியம் அனாகாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் தென் தண்டலம் முழுநேர நியாய விலைக்கடை 361 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது. பகுதி நேர நியாயவிலை கடை கோரும் வினாயகபுரம் பகுதியை சேர்ந்த 203 குடும்ப அட்டைகளும் இதில் அடங்கும்.
அரசு வழிகாட்டி நெறிகளின்படி பிரிக்கப்பட்ட தாய் அங்காடியில், குறைந்தபட்சம் 500 குடும்ப அட்டைகள் இருக்க வேண்டும். மற்றும் தாய் அங்காடிக்கும், பகுதி நேர கடைக்கும் 1.5 கிலோ மீட்டர் தூரம் இருக்க வேண்டும். மேற்படி புதிய பகுதி நேர நியாய விலை கடை கோரும், வினாயகபுரம் பகுதியில் 203 குடும்ப அட்டைகள் இருந்தபோதிலும், பிரிக்கப்பட்ட பின் தாய் அங்காடியில் 158 குடும்ப அட்டைகள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். எனவே அரசின் நிபந்தனைகள் பூர்த்தி ஆகாத நிலையில் வினாயகபுரம் பகுதியில் புதிய பகுதி நேர கடை அமைக்க சாத்திய கூறு இல்லை. ஆனாலும் உறுப்பினர் அந்த பகுதியில் 203 குடும்ப அட்டைகள் இருப்பதாகவும், தனி பஞ்சாயத்து என்று கூறுவதாலும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உறுப்பினர் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *