வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: எடப்பாடி அறிவிப்பு
திருச்சியில் இரும்புகடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருப்பதாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (10–ந் தேதி) சட்டப்பேரவையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பொத்தமேட்டுபட்டியில் நடந்த வெடிவிபத்து தொடர்பாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு எழுப்பிய கவன ஈர்ப்பு கேள்விக்கு பதிலளித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கண்ணுடையான்பட்டி கிராமம், பொத்தமேட்டுபட்டி பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடையில் நடந்த வெடி விபத்தில் மாரியப்பன், தந்தை பெயர் ராமசாமி என்பவர் 29.6.2017 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்ததோடு, அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டதுடன், மாரியப்பன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருளானந்து மற்றும் கனகராஜ் ஆகியோருக்கு தலா 50,000 ரூபாயும், சிறு காயமடைந்த பாலசுப்ரமணியனுக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அருளானந்து, கனகராஜ் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆணையிட்டுள்ளேன்.
இந்த வெடிவிபத்து குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.