தமிழக மீனவர்கள், படகுகளை மீட்காவிட்டால் காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு திருநாவுக்கரசர் எச்சரிக்கை
இலங்கை அரசால் கைது செய் யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளையும் உடனடியாக விடு விக்க நடவடிக்கை எடுக்காவிட் டால் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கி ரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை யும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடு விக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து சு.திருநாவுக்கரசர் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ‘கடல் தாமரை’ என்ற பெயரில் மாநாடு நடத்திய பாஜக, மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காணப்படும். மீனவர்களுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.
கடன் வாங்கிய கோடீஸ்வரர்கள் வெளிநாடு தப்பிச் செல்கின்றனர். கடன் வாங்கிய மீனவர்களின் படகுகளையும், விவசாயிகளின் உபகரணங்களையும் ஜப்தி செய் கின்றனர். தமிழகத்தில் மட்டும் அரசு, வங்கிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக 400 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் வாங்கிய வர்கள் அதை திருப்பிச் செலுத் தும்படி அச்சுறுத்தக் கூடாது. கடனை கவுரவமான முறையிலே வசூலிக்க வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு எதைப் பற்றியும் கவலைப் படவில்லை.
இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 150 படகுகள் அங்கே சிதைந்து துருப்பிடித்து வருகின்றன. காங்கி ரஸ் ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் உடனுக்குடன் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களது ஒரு படகுகூட பிடித்து வைக்கப்படவில்லை. மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மற்ற கட்சிகளுடன் இணைந்து அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்துவோம். இவ்வாறு திருநாவுக் கரசர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங் கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, மீனவர் அணி மாநிலத் தலைவர் எஸ்.டி.சபீன், பொதுச் செயலாளர் கே.ரவி, ஆலோசகர் கெஜன்நாதன் உள்ளிட்டோர் பேசினர்.