புதுவை பந்த் போராட்ட வன்முறைகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்: கவர்னர் கிரண்பேடி
புதுவையில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற பந்த் போராட்ட வன்முறைகள் குறித்து நீதி விசாரணை நடத்தி 15 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுவை கவர்னர் கிரண் பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
மோதலின் உச்சக்கட்ட மாக புதுவை சட்டமன்றத்துக்கு கவர்னரின் பரிந்துரையின் பேரில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்துள்ளது. மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்த மத்திய அரசை கண்டித்தும், கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும் கடந்த 8-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடந்தது.
பந்த் போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு, கவர்னர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பந்த் போராட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினர் அறிக்கைக்கும், ஊடகங்கள், நாளிதழ்களில் வெளிவந்த தகவல்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன. இதுதொடர்பாக மாஜிஸ்டிரேட் அளவிலான நீதி விசாரணை நடத்த வேண்டும்.
பதிவான வன்முறை சம்பவங்கள், பதிவாகாத வன்செயல்கள், வன்முறைகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா?, காவல்துறை அதிகாரிகளின் செயல் திறன், பொதுச்சொத்துக்களை பாதுகாக்க போலீசார் நிறுத்தப்பட்டது, வன்செயல்களில் ஈடுபட்டோர் மீது சரியான குற்றப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதியப்பட்டதா? சமூக அமைதி குலைப்பு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? வன்முறைச்சம்பவங்கள் நீதிமன்ற ஆதாரத்துக்காக வீடியோ காட்சியாக படமாக்கப்பட்டதா? பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதிலும், சமூக அமைதியை நிலை நாட்டுவதிலும் தாலுகா நடுவர், துணை மாவட்ட நீதிபதி ஆகியோரின் பங்கு, எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் நிகழாமல் தடுப்பதற்கான செயல் திட்டம், அனுபவ பாடங்கள் தொடர்பாக நீதிபதி விசாரிக்க வேண்டும்.
விசாரணையை முடித்து 15 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார்.