ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும் பிரதமர் உறுதிபடக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரத் தாக்குதலால், தான் அடைந்த வேதனைகளை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை என்றும், தாக்குதல் குறித்து ஆளுநர் என்.என். வோரா, முதலமைச்சர் மெஹபூபா முஃப்தியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது, அவர்களிடம் தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு அளிக்கும் என உறுதியளித்த பிரதமர், இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, ஆளுநர் வோரா ஆகியோரை தொடர்பு கொண்டு, தாக்குதல் தொடர்பான முழு விவரங்களை கேட்டறிந்தார். மேலும், தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜேட்லி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, பா.ஜ.க.வின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.