காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமன வழக்கு: கவர்னரை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்த வழக்கில் கவர்னரை எதிர்மனுதாரராக சேர்க்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் லயோனல் அந்தோணிராஜ். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளரான இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவின் கன்வீனராக பேராசிரியர் சீனிவாசன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரித்து தற்போது காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ள செல்லதுரை உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் கிடையாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பல்கலைக்கழக துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறார். எனவே அவர் புதிதாக பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். அவரை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பல்கலைக்கழக வேந்தரை (கவர்னர்) எதிர்மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை (12-ந் தேதி)க்கு ஒத்தி வைத்தனர்.