சென்னை நகருக்கு போரூர் ஏரியில் இருந்து குடிநீர் சப்ளை: அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்

சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதல் போரூர் ஏரியில் இருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை போக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாங்காடு அருகே கல்குவாரி தேங்கிய மழை நீரை ஆய்வு செய்து சுத்திகரித்து சென்னை நகருக்கு குடிநீராக சப்ளை செய்யப்படுகிறது.
மேலும் போரூர் ஏரியில் இருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி போரூர் ஏரி நீரின் தரம் குறித்து சென்னை குடிநீர் வாரியம், கிண்டி கிங் இன்ஸ்டியுட் உள்ளிட்ட பரிசோதனை நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டது. இதில் உரிய சுத்திகரிப்புக்கு பின் போரூர் ஏரி நீர் குடிநீருக்கு பயன்படுத்த உகந்தது என்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து போரூர் ஏரி தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக குறைந்த திறன் கொண்ட மாதிரி சுத்திகரிப்பு நிலையத்திற்கான கருவிகள் மூலம் சுத்திகரிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுகள் முடிவில் ரூ.1.85 கோடி திட்ட மதிப்பீட்டில் 100 நாட்களுக்கு தினமும் 40 லட்சம் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த மே 18-ந்தேதி போரூர் ஏரி கரையில் 1080 சதுர அடியில் தொடங்கப்பட்டது.
சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதல் போரூர் ஏரியில் இருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
ஏரியிலிருந்து நீரேற்ற இரண்டு 50 குதிரை திறன் கொண்ட பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. நீரின் மாசு நீக்குவதற்காக மூன்று கட்டங்களில் வடி கட்டி கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் துகள்கள் நிரப்பப்பட்ட 12 உயர் அழுத்த கலன்களும் அடங்கும். உயர் அழுத்த கலன்களில் நிரப்பப்பட்டுள்ள வடிகட்டி துகள்கள் இஸ்ரேலிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்ல 250 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் 300 மீட்டர் நீளத்திற்கு பதிக்கப்பட்டு போரூர் ஏரியின் அருகில் செல்லும் வீராணம் பிராதான குழாயில் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் வளசரவாக்கம், கே.கே.நகர், ஆலந்தூர் பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
போரூர் ஏரியின் மொத்த கொள்ளளவு 5 கோடி கன அடி ஆகும். தற்போது 1 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. தற்போதுள்ள நீர் இருப்பை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின், எம்.எல்.ஏ.க்கள் அலெக்சாண்டர், பலராமன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அருண்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *