சென்னை பெசன்ட்நகர் பீச்சில் உலக மக்கள் தொகை தின மாபெரும் விழிப்புணர்வு பேரணி
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் உலகமக்கள் தொகை தின மாபெரும் விழிப்புணர்வு பேரணி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இப்பேரணியில் செவிலிய மாணவ மணவிகள், செவிலியர், கலைக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஐக்கியநாடுகள் சபை ஜூலை 11ஆம் நாளினை உலக மக்கள்தொகை தினமாக அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றுவருகிறது.
நிகழ்வாண்டிற்கான உலக மக்கள்தொகை தினத்திற்கான கருத்து முழக்கமாக ‘‘புதிய அலை, புதிய நம்பிக்கை, முழுபொறுப்பு – இவைதான் குடும்பவளர்ச்சி’’ என்று ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மக்கள்தொகை 7.21 கோடியாகும். 2001 முதல் 2011 வரை தமிழகத்தின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.6 விழுக்காடாகும். தமிழ்நாடு ஏழாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். தமிழகத்தில் மக்கள் தொகை தற்பொழுது 7.78 கோடியாக இந்திய அரசின் மாதிரிப் பதிவு திட்டம் 2013–ன் படி கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கருவள விகிதம் 1.7 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து மாநிலங்களின் கருவள விகிதத்தை விட மிக குறைவானதாகும். தமிழகத்தின் தற்போதைய (2013) பிறப்புவிகிதம் ஆயிரம் மக்கள் தொகைக்கு 15.6 ஆகும். இந்தியாவிலேயே மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களில் கேரளாவுக்கு அடுத்தப்படியாக, தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் குடும்பநலம் மற்றும் தாய்சேய்நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் பிறப்பு விகிதம், குழந்தைகளின் இறப்புவிகிதம் தாய்மார்களின் இறப்புவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. ஆயினும் சிசு மரணவிகிதத்தை 2017–க்குள் 15 க்கு கீழ் குறைப்பதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு நலத் திட்டங்கள் அம்மாவின் அரசில் தொடந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தாய்மார்கள் கையில் வெற்றி
தமிழ்நாட்டில் குடும்பநலத் திட்டத்தின் வெற்றி முழுமையாக தாய்மார்களுக்கே உரித்தானதாகும். இத்திட்டத்தில் ஆண்களும் முனைப்புடன் ஈடுபடவேண்டும். இதற்கு ஏதுவாக தற்போது எளிய தழும்பில்லா ஆண் கருத்தடை சிகிச்சைமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இம்முறையைப் பின்பற்றி ஆண்கள் பெருமளவிற்கு குடும்பநலத் திட்டத்தின் வெற்றிக்கு உதவவேண்டும்.
குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. பிறந்ததைக் காப்போம், பிறப்பதைத் தவிர்ப்போம் என்பதற்கிணங்க தாய்-சேய் மற்றும் குடும்பநலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிறக்கும்போது ஏற்படுகின்ற தொற்று
நோயை தடுக்கும் பொருட்டு அனைத்து பிரசவங்களும் மருத்துவமனையில் நிகழ்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குடும்பநலத் துறையின் சிறந்த செயல்பாட்டினால் மிகை பிறப்பு வரிசை என்று சொல்லக் கூடிய மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடைய தாய்மார்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 7.9 விழுக்காடாக குறைந்துள்ளது. பனிரெண்டாம் ஐந்தாண்டு திட்ட இறுதிக்குள் (2017) சிசு மரணவிகிதம் 15 க்கு கீழ் குறைய குடும்பநலம் மற்றும் தாய்சேய் நலப்பணிகள் வெற்றி பெறப் பாடுபடுவோம். நம் நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள்தொகை பெருக்கம் ஒரு தடையாக உள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்பநலத் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஜெயவர்தன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், குடும்ப நலத்துறை இயக்குனர் கு.ஜோதி மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குனர் பானு, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.