கச்சத்தீவை மீட்போம்
கச்சத்தீவை நிச்சயமாக மீட்போம் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்பட கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று மீன்வளத்துறை, பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் கே.பி.பி.சாமி பேசினார்.
தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் தாக்கி வருகிறார்கள். அவ்வப்போது மீட்கப்படுகிறார்கள். இப்போது ஒரு மாதத்துக்கும் மேலாக 60க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் 30 நிமிடத்தில் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டிருக்கிறோம் என்று கே.பி.பி.சாமி கூறினார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து, தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி கச்சத்தீவை மீட்பது தான். 1974ம் ஆண்டு இலங்கைக்கு நமது கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அதனை மீட்க வேண்டும் என்று தொடர்ந்து அம்மா மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து பிரதமருக்கு நமது முதலமைச்சர் கடிதம் எழுதி வலியுறுத்தி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் 30 நிமிடத்தில் மீனவர்களை மீட்டதாக உறுப்பினர் கூறுகிறார்.
உங்கள் ஆட்சியில் மீனவர்களை மீட்க 120 நாட்கள் ஆனது. உங்களது ஆட்சியில் 32 முறை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதில் 10 தமிழக மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நீங்கள் உதவி ஏதும் செய்யவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட படகுகளுக்காக அம்மா 90 லட்சம் ரூபாய் வழங்கினார். நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டார்.
கச்சத்தீவை தாரை வார்த்ததால் நமது எல்லை சுருங்கி விட்டது. இலங்கை எல்லை விரிவடைந்து விட்டது. தமிழக மீனவர்களை பாதுகாக்க அம்மா வழியில் கச்சத் தீவை மீட்போம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஆறும், கடலும் கலக்கும் முகத்துவாரத்தில் தூர்வாரப்பட வேண்டும் என்று கே.பி.பி.சாமி கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், முகத்துவாரங்களில் தூர்வாரும் பணி நடக்கிறது. இப்போது கூட 9 இடங்களில் தூர்வாரப்படுகிறது. மேலும் இதற்காக ரூ.26 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.