வீடற்ற ஏழை மக்களுக்கு 3½ லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள்

 

 

வீடற்ற ஏழை மக்களுக்கு 2017–2018ம் நிதியாண்டில் 3.50 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார்.
இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், தீ, சுனாமி மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகளை நீட்டித்து கடல் அரிப்பு, இடி, மின்னல், சுழற்காற்று மற்றும் சூறைக்காற்று ஆகியவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இனிவரும் காலங்களில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
சட்டசபையில் வருவாய் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:– வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் ஏற்கனவே, பொதுமக்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்களை தொடர்ந்து மேலும் கீழ்க்கண்ட 15 சான்றிதழ்கள் இணையதள மின் சேவை மூலம் வழங்கப்படும்.
1. விவசாய வருமானச் சான்றிதழ்
2. சிறு, குறு விவசாயி சான்றிதழ்
3. கலப்புத் திருமணச் சான்றிதழ்
4. விதவைச் சான்றிதழ்
5. வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்
6. குடி பெயர்வு சான்றிதழ்
7. இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்
8. ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
9. திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ்
10. வாரிசு சான்றிதழ்
11. வசிப்பிடச் சான்றிதழ்
12. சொத்துமதிப்பு சான்றிதழ்
13. அடகு வணிகர் உரிமம்
14. கடன் கொடுப்போர் உரிமம்
15. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழ் (மைய அரசு)
விவசாயிகளின் நலனுக்காக இ–அடங்கல் திட்டம் நடைமுறைபடுத்தப்படும்.
விவசாயிகள் பயிர்க்கடன், பயிர்காப்பீடு, இழப்பீடு நிவாரணம் ஆகிய தேவைகளுக்கு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது இணையதளத்திலிருந்து நேரடியாகவே அடங்கல் நகலினை பதிவிறக்கம் செய்து பயன்பெற இந்த இ–அடங்கல் முறை பெரிதும் உதவும். அடங்கல் தொடர்பான விவரங்களை பார்வையிடுவதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் பதிவிறக்கம் செய்ய சிறுகட்டணம் நிர்ணயிக்கப்படும்.
எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர்சாகுபடி குறித்த விவரங்களை பதிவு செய்யும் பணியானது இத்திட்டத்தின் மூலம் எளிமையாக்கப்படுவதால், அவர்கள் பணித்திறன் மேம்படுவதோடு அவர்களது பணிச்சுவையும் இனிவரும் காலங்களில் வெகுவாக குறையும். விவசாயிகள் இணையதளத்தின் மூலம் ஒத்திசைவு செய்யப்பட்ட அடங்கல் குறித்த பதிவு விவரங்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் எளிமையாகவும், விரைவாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
48 மணி நேரத்தில் சான்றிதழ்
சாதி சான்றிதழ்களை பொதுமக்களும் குறிப்பாக பள்ளி மாணவர்களும் மேலும் விரைவாகவும் எளிதாகவும் பெறவேண்டும், என்ற நோக்கில் முதற்கட்டமாக தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்ட்ட வகுப்பினை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் குடும்பத்தில் எவரேனும் ஏற்கனவே இணையவழி மின்னனு சேவை மூலமாக சாதிச்சான்று பெற்றிருப்பின் அதன் விவரத்துடன் இ–சேவைமையங்கள் மூலமாக விரைவுச் சேவை கட்டணமாக ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கும் பட்சத்தில் விண்ணப்பித்த நேரத்திலிருந்து 48 மணிநேரத்திற்குள் (விடுமுறைதினங்கள் நீங்கலாக) சாதிச்சான்றிதழ் வழங்கப்படும்.
பருவமழை மற்றும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னர் பேரிடர்களை எதிர்கொள்ளும் பொருட்டு மாநிலத்தில் மண்டல வாரியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை களப்பணி யாளர்களை ஒருங்கிணைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தயார் செய்ய ஆண்டொன்றுக்கு ரூ.75 லட்சம் செலவு மேற்கொள்ளப்படும்.
ஆபத்து கால நண்பன்
பயிற்சி திட்டம்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், இந்தியாவில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேர்ந்தெடுத்து, அப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்களுக்கு பேரிடர் மீட்புப் பயிற்சியானது ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த கால வெள்ள பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சென்னை மாவட்டம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 200 சமூக ஆர்வலர்களுக்கு பேரிடர் மீட்புப் பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தின்டி, ரூபாய் 45.40 லட்சம் இந்த நிதியாண்டில் செலவிடப்படும்.
பேரிடர் காலங்களில் மாநில நிவாரண ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களுக்கு தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிடவும், பணிகளின் முன்னேற்றம் குறித்து மேற்பார்வை செய்திடவும், தகவல் தொடர்பினை துரிதப்படுத்தும் வகையில் வருவாய் நிருவாக ஆணையர், மாநில நிவாரண ஆணையர் அலுவலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலும் மற்றும் அனைத்து மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களிலும் காணொளி கருத்தரங்கு மையங்களானது ரூபாய் 1.93 கோடி மதிப்பீட்டுச் செலவில் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ஏற்படுத்தப்படும்.
நடப்பாண்டில் திண்டுக்கல் , நாகப்பட்டினம், வேலூர், கரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கும், காஞ்சிபுரம் , கரூர், பெரம்பலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி மற்றும் வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர்களுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்ட வரவேற்பு வட்டாட்சியர், வேலூர் மாவட்ட ஆம்பூர் வட்டாட்சியர் (ச.பா.தி) திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டாட்சியர்களுக்கும் மற்றும் வேலூர், திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு முக்கிய பிரமுகர் வருகைக்கான சீருந்துகள் மற்றும் ஈப்புகள் என 20 வாகனங்கள் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ.235 லட்சம் செலவினம் ஏற்படும்.
வெள்ளத்தினால் ஏற்படும் சேதங்களை ஆற்றுப்படுகைகள் மற்றும் நீர்நிலைப்பகுதிகளை சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் குறைக்க முடியும். நீர்வழி பாதைகளை துல்லியமாக கண்டறிவதற்கு வான்வழி புகைப்படங்கள் உதவி புரிகின்றன. அணைகள் கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கும், கால்வாய்களின் தொடர்ச்சியினை கண்டறியவும் பிற நீர்வழி பாதைகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கும் வான்வழி புகைப்படங்கள் உதவி புரிகின்றது.
வரும் காலங்களில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு ஆளில்லா வானூர்தி மூலம் வான்வழி புகைப்பட ஆய்வானது பெரும் பங்காற்றி வருகிறது. எனவே, இந்த நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பேரிடர் கால தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு புதிய முயற்சிகள் துவக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 7.01 கோடி செலவில் ஆய்வினை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மிகவும் புகழ்ப்பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டு முழுவதும் மத்திய மாநில அமைச்சர்கள், உச்ச நீதி மன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில உயர் அலுவலர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வருகை புரிகின்றனர்.
இம்முக்கிய பிரமுகர்களின் வரவேற்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வரவேற்பு வட்டாட்சியர் பணியிடங்கள் உடனடியாக உருவாக்கப்படவேண்டியுள்ளது. இச்சூழ்நிழையில் திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் வரவேற்பு பணிகளை கவனிக்கும் பொருட்டு துணை வட்டாட்சியர் பணியிடத்தினை மேம்படுத்தி வரவேற்பு வட்டாட்சியர் பணியிடம் உருவாக்கப்படும்.
நிரந்தர பணியிடங்கள்
மாற்றுதல்
அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் நிர்வாக மேம்பாட்டிற்காகவும், தேவையின் அடிப்படையில் வருவாய்த்துறையில் மாவட்ட வருவாய் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் நிலை வரை பல்வேறு தற்காலிகப் பணியிடங்கள் அவ்வப்போது உருவாக்க பட்டுள்ளது. இத்தற்காலிகப் பணியிடங்களுக்கான பணிநீட்டிப்பு முன்மொழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு அனுப்ப படுகின்றன. இப்பணியிடங்கள் மிகவும் அத்தியாவசியமான பணி யிடங்களாகும். இப்பணியிடங்கள் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாக, தற்காலிகப் பணியிடங்களாக இன்றளவும் உள்ளன.மேலும் இவற்றிற்கு ஆண்டுதோறும் பணி நீட்டிப்பு அரசாணை பெறப்பட்டு இப்பணியிடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் ஏற்படும் நிர்வாக சிரமங்களை களையும் விதமாகவும் இப்பணியிடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கிடும் நோக்கிலும், முதன்மைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் கட்டுப்பாட்டில் மூன்றாண்டுகளுக்கு மேல் உள்ள 3199 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும். புதிய தொழில் நுட்பங்களின் மூலம் பேரிடர் கால பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும். பேரிடர் பணிகளில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, மாநிலத்தின் அனைத்து பேரிடர் தகவல்களின் புள்ளியியல் பகுப்பாய்விற்காக முடிவு எடுக்கும் ஒரு அமைப்பாக, புவிசார் தகவல் பிரிவு என்ற அமைப்பினை நிறுவ உள்ளது. இப்பிரிவானது, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப உதவியுடன் அமையப்படவுள்ளது. இவ்வமைப்பு பாராம்பரிய தகவல்களை மேலாண்மை செய்வதற்காக, புவிசார் தகவல் அமைப்பு பயன்பாடுகளை உருவாக்குவதற்கும், புவியியல் புள்ளி விவரங்கள் மற்றும் முன்அறிவிப்பு புள்ளி விவரங்கள் விளக்க மற்றும் கணிப்பு பகுப்பாய்வு ஆகியவை மூலமாக பேரிடர் கால பணிகளான தடுப்பு, தணிப்பு, ஆயத்த நிலை, மீட்பு, நிவாரணம் மற்றும் மீளுதல் போன்றவற்றிற்கு உருவகப்படுத்துதல் மாதிரியினை உருவாக்கிட உதவி புரியும். இந்த புவிசார் தகவல் பிரிவானது மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 7.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
பல்துறை நிபுணர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் அண்மை காலங்களில், வெள்ளம், புயல், வறட்சி போன்ற பேரிடர்கள் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. வரலாறு காணாத இப்பேரிடர்களை தமிழக அரசு மிகத் திறமையாக கையாண்டு வருகின்றது. பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பேரிடர்களை எதிர்கொள்ள அரசு இயந்திரத்தை நவீனப்படுத்தி சிறப்புற கட்டமைப்பது அவசியமாகும். எனவே, தமிழகத்தில் ஏற்படக்கூடிய பேரிடர்களை திறமையாக கையாள கீழ்க்கண்ட துறை வல்லுநர்களை புறப்பணி முறை அல்லது ஒப்பந்த அடிப்படையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நியமனம் செய்யப்படும்.
1. மாநில வறட்சி கண்காணிப்பு மையம்
* வேளாண்மை வல்லுநர்
* நீர் வடிகால் மேலாண்மை வல்லுநர்
* நீர்வள மேலாண்மை வல்லுநர்.
* புள்ளியியல் பகுப்பாய்வாளர்
* ஆவணத் தொகுப்பு நிபுணர்
*இயற்கை வள மேலாண்மை வல்லுநர்
மேற்கண்ட மையமானது மாநில நிவாரண ஆணையர் தலைமையின் கீழ் செயல்படும். இம்மையம் மாநில செயலாக்கக் குழுவிற்கு வறட்சி மேலாண்மை குறித்து தக்க ஆலோசனைகளை சமர்ப்பிக்கும். இதே அடிப்படையில் மாவட்ட அளவிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கீழ்க்காணும் உறுப்பினர்களை கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
2. மாவட்ட வறட்சி கண்காணிப்பு மையம்
* மாவட்ட ஆட்சியர்.
* மாவட்ட வருவாய் அலுவலர்.
* திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை.
* கண்காணிப்பு பொறியாளர், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு).
* இணை இயக்குநர், வேளாண்மை துறை.
* இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை.
* மண்டல இணைப் பதிவாளர், கூட்டுவுறத் துறை.
* துணை இயக்குநர், தோட்டக்கலைத் துறை.
* சார் ஆட்சியர்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள்.
* தேவைக்கேற்ப வல்லுநர்கள்.
மாவட்ட அளவிலான இம்மையமானது மாநில நிவாரண ஆணையருக்கு தன்னுடைய பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
* நீரியியல் ( வெள்ளம் / சுனாமி / புயல் ) சார்ந்த பேரிடர் மேலாண்மை நிபுணர் தொழில் துறை சார்ந்த பேரிடர் ஆலோசகர்
* அணு உலை சார்ந்த பேரிடர் ஆலோசகர்
* திறன் மேம்பாடு, பயிற்சிக்கான ஆலோசகர்
* வானிலை ஆய்வியல் நிபுணர்
* சட்ட வல்லுநர்
* கணினி ஆதரவு அலகு
* கண்காணிப்பு வல்லுநர்
திறன் மேம்பாடு
அரசின் பல்வேறு துறைகளும், சமூக பங்களிப்புடன் மீட்பு, நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு பணிகளில் ஈடுபடுகின்றன. மிகுந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இப்பணிகளில் ஈடுபடும் பல்வேறு துறைகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவது மிகவும் அரசியமான ஒன்றாகும். எனவே, பல்வேறு துறையினர் மற்றும் சமுதாய அமைப்புகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூபாய் 5 கோடி செலவில் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
பேரிடர் மேலாண்மை, நிர்வாகத்தின் ஒரு அங்கமாக இருந்த நிலை மாறி, மிக முக்கிய பணியாக, குறிப்பாக, பருவ நிலை மாறுதலின் காரணமாக சவாலான பணியாக உருவாகி வருகின்றது. நவீன தொழில் நுட்பமும், திறன் மேம்பாடும் இதனை எதிர்கொள்ள மிக அவசியமாகும். அதன் அடிப்படையில், கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை பகுதிகளில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் ரூபாய் 28 லட்சம் செலவில் ஏற்படுத்த இவ்வரசு தீர்மானித்துள்ளது.
பேரிடர் மேலாண்மையானது, மீட்பு மற்றும் நிவாரணம் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தது. தற்போது தணிப்பு பேரிடர் மேலாண்மையின் முக்கிய நடவடிக்கையாக உருவாகியுள்ளது. எனவே, தமிழக அரசும் தொலை நோக்கு பார்வையுடன் பேரிடர்களால் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகையில் பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளாகும் என கண்டறிய பட்ட பகுதிகளில் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நீண்டகால பேரிடர் தணிப்பு நிதி ஒன்றினை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பேரிடர் தணிப்பு திட்டங்கள் யாவும், தொடர்புடைய துறையினரால் மாநில பேரிடர் நிவாரண ஆணையர் மூலமாக அரசின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்.
சேவைகளை
மின்னணுமயமாக்கம்
நில நிர்வாகத்தின் முக்கியப் பணிகளான நில எடுப்பு, நில மாற்றம், நில உரிமை மாற்றம், குத்தகை, ஒப்படை, வீட்டுமனை ஒப்படை, பட்டா மாற்றத்திற்கான மேல்முறை யீடு மற்றும் சீராய்வு மனுக்கள் குறித்த சேவைகள் ஒருங்கிணைந்த இணையவழி வாயிலாக மேற்கொள்ள ஏதுவாக புதிய மென்பொருள் உருவாக்கப்படும். மேலும், நில நிர்வாகம், நிலச்சீர்திருத்தம் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையர்களால் பிறப்பிக்கப்படும் நில ஆவண திருத்த ஆணைகள், உடனுக்குடன் கிராம வருவாய் கணக்குகளில் மாறுதல் செய்ய ஏதுவாக ரூ.1.38 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
குறுவட்ட அளவர்களை
தொடர்பு கொள்ள
முதலமைச்சர் ஜெயலலிதாவினால் 13.5.2013 அன்று சட்டமன்ற பேரவை விதி 110-ன்படி அறிவிக்கப்பட்டவாறு, பொதுமக்கள், குறுவட்ட அளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள ஏதுவாக, முதற்கட்டமாக 100 குறுவட்டங்களில் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் கட்டபட்டு முதலமைச்சரால் திறந்து வைக்க பட்டுள்ளன. பொதுமக்களுக்கான இவ்வசதிகளை மேலும் விரிவுபடுத்து வதற்காக நடப்பு நிதியாண்டில் மேலும் 10 குறுவட்டங்களில் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் சுமார் ரூ.2.06 கோடி (ஓவ்வொரு குடியிருப்புக்கும் ரூ.20.68 லட்சம்) செலவில் கட்டப்படும். நிலஅளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 422 நிலஅளவர் பணியிடங்களும், 328 வரைவாளர் பணியிடங்களும் மற்றும் 28 அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் நிரப்பப்படும்.
கணினிப்படுத்தப்பட்ட புலப்படங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏதுவாக 1140 குறுவட்ட அளவர்களுக்கு ஏற்கனவே மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
நிலஅளவை ஆவணங்கள் அனைத்தும் இணையவழி பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படவுள்ளன. எனவே, இணையவழி பட்டா மாறுதலில் துரித நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 1140 குறுவட்ட அளவர்களுக்கும் ரூ. 70 இலட்சம் செலவில் ஓராண்டு சந்தாவுடன் கூடிய 3-ம் தலைமுறை தரவு அட்டைகள் வழங்கப்படும். வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மற்றும் பயிர்க்காப்பீடு தொடர்பான விவரங்களை பதிவு செய்வதற்காக தமிழ்நிலம் மென்பொருளில் கூடுதல் செயலிகள் உருவாக்கப்படும்.
அரசால் பராமரிக்கப்படும் நில உரிமைப் பதிவேடுகளில் இடம் பெற்றுள்ளவர்களின் உரிமையை மறுக்க இயலாத நிலையில் உறுதிப்படுத்துகிற வகையிலான பத்திரப்பதிவு முறையே டாரென்ஸ் டைட்டில் முறை என்பதாகும். நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டப் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்ட ஊரகப்பகுதியில் டாரென்ஸ் டைட்லிங் அமைப்பு முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *