தொற்று நோய் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை: விஜயபாஸ்கர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாட்டில் தொற்றுநோய் பரவுதல், காய்ச்சல் நோய் எண்ணிக்கை மற்றும் பருவகால நோய்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் எழும்பூர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த ஆண்டு கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் காய்ச்சலால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை காரணமாகவும், அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அண்டை மாவட்டங்களில் தற்போது நிலவும் காய்ச்சல் நோய் நிலைமை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர் சௌமியா சுவாமிநாதன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பூ.உமாநாத், பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் க.குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
தொற்றுநோய் பரவல் குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் காய்சசல் நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் அங்கங்கு எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்கனிக்கோட்டை வட்டம் அஞ்சட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நெட்ராபாளையம் கிராமத்தைச் சார்ந்த ஒருவருக்கு காய்ச்சல் காரணமாக,இத்திட்டத்தின் கீழ் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள தேசிய நுண்ணுயிர் ஆய்வு மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில், இவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது பற்றி விவாதிக்கப்பட்டது.
ஏடிஸ் வகை கொசுக்கள்
ஜிகா வைரஸை பொறுத்தவரை இது நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் வகை கொசுக்களால் பரப்பப்படுகிறது. இந்த வைரஸ் 1947–ம் ஆண்டு உகண்டாவில் உள்ள ஜிகா என்ற காட்டில் கண்டறியப்பட்டது. 1952-ஆம் ஆண்டு தான்சானியா நாட்டில் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது. 2007–ம் ஆண்டு யாப் என்ற தீவில் பரவியது.
2015–ம் ஆண்டு பிரேஸில், கொலம்பியா, தென் அமெரிக்கா, இன்தோனேசியா போன்ற நாடுகளுக்கு பரவியது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சலால் 3 நபர்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அஞ்சட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற ஒரு நபர் முதன் முதலாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளார். இவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.
இந்த கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியினை சுகாதார செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் பார்வையிட்டு காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். மேலும் இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் அவரை சுற்றியுள்ளோரிடம் எடுக்கப்பட்ட 4 மாதிரிகள் அனைத்திலும் ஜிகா வைரஸ் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், தோல் அரிப்பு
இந்நோயின் அறிகுறிகள் காய்ச்சல், தோலில் அரிப்பு, கண் சிவப்பு, மூட்டு வலி, உடல் சோர்வு, தலைவலி போன்றவைகளாகும். இது 2 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இந்நோய் தமிழ்நாட்டில் மேலும் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வைரஸ் காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு ‘‘சிறிய தலை குறைபாடு” வரும் எனக் கூறப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே இந்த வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட குஜராத் மாநிலத்திலும் இந்த சிறிய தலை குறைபாடு காணப்படவில்லை. எனவே இதுகுறித்து பெண்கள் அச்சப்படத்தேவையில்லை. சென்னையில் இக்குறைபாட்டோடு பிறந்த குழந்தையிடம் இந்த வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் பீதி அடைய வேண்டாம்.
கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்பு தற்காலிகப் பணியாளர்கள் வட்டத்திற்கு 10 நபர்கள், ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 20 நபர்கள் மற்றும் மாநகராட்சியில் தேவைக்கு ஏற்ப தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கொசு ஒழிப்பு பணி சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு பணிகளுக்காக ஊரக, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறைகளில் 9,916 கையால் எடுத்துச் செல்லும் புகை அடிப்பான்களும் மற்றும் 270 வாகனத்தில் பொருத்தப்பட்ட புகை அடிப்பான்களும் உள்ளன. தொற்று நோய்களை தடுக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.
மருந்துகளால்
கட்டுப்படுத்த முடியும்
ஜிகா காய்ச்சலை தற்போதுள்ள மருந்துகளை கொண்டே எளிதில் கட்டுப்படுத்த முடியும். அனைத்து அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. கொசு ஒழிப்பு பணிக்கு தேவைப்படும் கொசு புழு கொல்லி மருந்து, முதிர் கொசு கொல்லி மருந்து, புகையடிப்பான்களும் தேவையான அளவில் இருப்பில் உள்ளது.
தமிழகத்தில் துறைமுகம், விமான நிலையம், ஆகிய இடங்களில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்நோயின் அறிகுறிகள் உள்ளதா என பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜிகா காய்ச்சல் பற்றி பொதுமக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை என அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *