செய்யூர் மின் திட்டத்துக்கு தனி நிலக்கரி சுரங்கம்: மத்திய அமைச்சர் கோயலிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

செய்யூர் மின்சாரத் திட்டத்துக்காக தனி நிலக்கரி சுரங்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மத்திய மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார்.
2011- ம் ஆண்டில் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற பிறகு, மாநில மின் தொகுப்பில் 10,492 மெகாவாட் மின்சாரத்தை சேர்த்ததோடு, கடுமையான மின் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்த தமிழகத்தை உபரி மின்சாரம் பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டினார் என்று மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
மேலும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறிப்பிட்ட அம்சங்கள் விவரம் வருமாறு:–
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக தேவைப்பட்ட 15 ஆயிரத்து 343 மெகாவாட் மின்சாரத்தையும், 34.56 கோடி யூனிட் என்ற உச்சபட்ச மின்சார நுகர்வையும் தமிழக அரசு கடந்த ஏப்ரல் 29ம் தேதி எதிர்கொண்டது.
இந்தியாவில் முன்னோடி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் 10 ஆயிரத்து 465 மெகாவாட் மின்சாரத்தை நிறுவி, இந்தியாவில் முன்னிலை பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.
காற்றாலை மின்சாரத்தில் தமிழகத்தின் நிறுவுதிறன் 7 ஆயிரத்து 849 மெகாவாட் ஆகும். இதுதான் நாட்டிலேயே அதிகபட்ச நிறுவுதிறனாகும். அதோடு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 4,500 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை நிறுவத்திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றாலை மூலம் உச்சபட்சமாக மே 30ம் தேதி 9.95 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. காற்றாலை மூலம் 4 ஆயிரத்து 957 மெகாவாட் மின்சாரம் ஜூன் 5ம் தேதி உற்பத்தி செய்யப்பட்டு சாதனை எட்டப்பட்டது.
சூரிய மின்சக்தியிலும் தமிழகம்தான் 1,702 மெகாவாட் நிறுவுதிறனைக் கொண்டு முன்னிலை வகிக்கிறது. படிப்படியாக அடுத்த ஆண்டுகளில் இதனுடன் மேலும் 4 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகள், வீட்டு உபயோகம், விசைத்தறி மற்றும் கைத்தறி ஆகிய மின் உபயோகிப்பாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்த பிறகு, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) ரூ. 22 ஆயிரத்து 815 கோடி கடனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த அம்சங்களை மத்திய அமைச்சரிடம் குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
செய்யூர் மின்சார திட்டத்துக்காக தனி நிலக்கரி சுரங்கத்தை ஏற்படுத்துவதற்கான ஏல நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். காற்றாலை உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதற்காக தனியாக மாநிலங்களுக்கு இடையேயான பசுமை மின்தடத்தை உருவாக்கித் தர வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4- ஆம் யூனிட்களின் மொத்த உற்பத்தியான 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்த சந்திப்பின்போது, மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, துறையின் முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சாய்குமார், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பி.பி.ஆச்சார்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *